வெள்ளி கிரக ஆய்வுக்காக 2028-ல் வீனஸ் விண்கலம் ஏவப்படும்

வெள்ளி கிரக ஆய்வுக்காக 2028-ல் வீனஸ் விண்கலம் ஏவப்படும்
Updated on
1 min read

சென்னை: விண்வெளி அறிவியல் ஆய்வில் சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா, ஆஸ்ட்ரோசாட் உட்பட பல்வேறு முன்னெடுப்புகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் சூரிய குடும்பத்தில் பூமிக்குமிக அருகில் உள்ள வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வீனஸ் விண்கலத்தை அனுப்புவதற்கு இஸ்ரோ திட்டமிட்டு வந்தது.

சமீபத்தில் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.1,236 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை அடுத்து பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இந்நிலையில், வீனஸ் விண்கலம் 2028 மார்ச் 29-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டம் மூலமாக விண்கலம் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் மொத்தம் 19 அதிநவீன ஆய்வுக் கருவிகள் இடம்பெறும். அதில் 16 கருவிகள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட உள்ளன. எஞ்சிய 3 சாதனங்கள் இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, சுவீடன் ஆகிய நாடுகளின் பங்களிப்பில் வடிவமைக்கப்பட இருக்கின்றன.

அனைத்து தயாரிப்பு பணிகளையும் முடித்து விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக 2028 மார்ச் 29-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 112 நாட்கள் பயணத்துக்கு பின்னர் ஜூலை 19-ம் தேதி வெள்ளி கிரகத்தை சென்றடையும்.

அதன்பின்னர் வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 500 கி.மீ தூரமும்,அதிகபட்சம் 60,000 கி.மீ தூரமும் கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே வெள்ளி கிரகத்தை வலம் வந்துஅதன் வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் இதர புவியியல் அம்சங்களை ஆய்வு செய்து தரவுகளை வழங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in