Published : 04 Oct 2024 06:27 AM
Last Updated : 04 Oct 2024 06:27 AM

பண்டிகை காலங்களில் தட்டுப்பாடின்றி பால், பால் பொருட்கள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

சென்னை: புதிதாக பால் வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பொறுப்பேற்ற பிறகு, அம்பத்தூர், சோளிங்கநல்லூர் பால் பண்ணைகள் மற்றும் பால் உப பொருட்கள் பண்ணையில் நேற்று ஆய்வு செய்தார்.

அம்பத்தூர் பால் பண்ணையை பொருத்தவரை, தினசரி சுமார் 4.60லட்சம் லிட்டர் பால் தயாரிக்கப்பட்டு அம்பத்தூர், அண்ணாநகர், தி.நகர்,அயனாவரம், ஆவடி, திருவல்லிக் கேணி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஆலையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, பால் பாக்கெட் தயாரிப்பு மற்றும் இயந்திரங்களை பாதுகாப்பான முறையில் கையாளுவது மற்றும் பால் பண்ணையை தூய்மையாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, பால் உப பொருட்கள் பண்ணையில் உள்ள தயாரிப்பு பிரிவை ஆய்வு செய்தார். பால் உப பொருட்களான இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் இதர உப பொருட்களின் தயாரிப்பு முறைகளைப் பார்வையிட்டார்.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களில் தேவைப்படும் இனிப்புகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசித்தார். எதிர்வரும் பண்டிகை காலங்களில். பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித தடையும் இன்றி ஆவின்பால் விநியோகம் செய்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினார். ஆவின் நிறுவனத்தின் வருவாயை இரட்டிப்பாக்கவும், பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டர் என்று அதிகரிக்கவும், அந்த இலக்கை எட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேபோல் சோளிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையிலும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரி களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஆய்வின்போது, பால்வளத் துறை இயக்குநர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் சு. வினீத், ஆவின் இணை நிர்வாக இயக்குநர் க.பொற்கொடி மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x