

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் மற்றும் விதிமுறைகள் தொடர்பான விதிமீறல்கள் குறித்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) நடவடிக்கை எடுக்க முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை, சத்யசாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் மீது, கடந்த 2010ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறி, போலி தகவல்கள் அளித்து அங்கீகாரம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து குற்றப்பத்திரிகைகளை ரத்து செய்ய கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் பதிவாகின.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது சிபிஐ குற்ற வழக்கு பதிவு செய்ய விதிகளில் இடமில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த டாக்டர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்ட பின், அவரது வாக்குமூலம் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ததாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரத்தை சிபிஐயால் எடுத்துக் காட்ட முடியவில்லை.
மருத்துவக் கல்லூரி அங்கீகாரம், பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும், பதிவேட்டிலிருந்து கல்வி நிறுவனப் பெயரை நீக்கவும், மருத்துவக் கவுன்சிலுக்குதான் அதிகாரமுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் விதிமுறைகள் மீறல், தவறு என்றாலும், கிரிமினல் குற்றம் இல்லை. எனவே சிபிஐயின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியாது என்றார்.