தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பை தடுக்க சுகாதார துறை செயலர் தலைமையில் 18 பேர் குழு

தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பை தடுக்க சுகாதார துறை செயலர் தலைமையில் 18 பேர் குழு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதத்தை 45.5-ல் இருந்து 10 ஆக குறைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 45.5 என்ற அளவில் உள்ளது. அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்தம், கிருமி தொற்று, இதய பாதிப்புகள் ஆகியவைதான் பேறுகால உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதையடுத்து, பேறுகால உயிரிழப்புகளை தடுக்க, மாநில அளவிலான செயலாக்க குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் அறிவுறுத்தியது.

அதன்படி, சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹுவை தலைவராக கொண்டு18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, அந்தந்த மாவட்டஅளவில் ஆட்சியர் தலைமையில் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. பேறுகால உயிரிழப்புகளை கண்காணித்து, அதை தடுக்கும் நடவடிக்கைகளில் இக்குழுவினர் ஈடுபட வேண்டும்.

மருத்துவ கட்டமைப்புகள்: அனைத்து துறையினரும் ஒருங்கி ணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் உரிய மருத்துவ கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதம் லட்சத்துக்கு 10 என குறையும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in