Published : 03 Oct 2024 06:43 AM
Last Updated : 03 Oct 2024 06:43 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், தூய்மை வாரம் நிறைவு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் தெற்குரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்களின் தேசபக்தி நிகழ்ச்சியும், புகழ்பெற்ற கலைஞர் எம்.ஏ.சங்கரலிங்கத்தின் 10 நிமிட மகாத்மா காந்தியின் உருவப்படம் வரைதல் மற்றும் கையெழுத்து இயக்கம் ஆகியவையும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, காந்தியடிகளின் மறக்க முடியாத புகைப்படங்கள், தூய்மையை வலியுறுத்தும் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தூய்மைப் பிரச்சாரத்தின்போது, நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் 15 நாட்கள் சிறப்பு தூய்மைப் பிரச்சாரம் செப்.16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்கள், பணிமனைகள், ரயில்வே குடியிருப்புகள், மருத்துவமனைகளில் தூய்மைப் பணி மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது. 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 840 தூய்மைப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1,585 மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT