‘பணி செய்ய இடையூறு’ - கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா @ விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட  ஊராட்சிமன்றத் தலைவர் சங்கீதா. 
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட  ஊராட்சிமன்றத் தலைவர் சங்கீதா. 
Updated on
1 min read

விழுப்புரம்: பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை, பணி செய்யவிடாமல் சிலர் தடுப்பதாக கூறி, கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சங்கீதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி அருகே வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆனாங்கூர் ஊராட்சிமன்ற தலைவராக ஏழுமலை மனைவி சங்கீதா பதவி வகித்து வருகிறார். இவர் இன்று (அக்.2) மதியம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கையில் வைத்திருந்த பதாகையில், “ஆனாங்கூர் ஊராட்சிமன்றத் தலைவராகிய என்னை தொடர்ந்து சாதிய வன்கொடுமை செய்துவரும் ஊராட்சி துணைத் தலைவரைக் கண்டித்து கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன்,” என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், குணசேகரன் ஆகியோர் அவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை, ஊராட்சிமன்ற தலைவர் பணியை செய்யவிடாமல், சிலர் தடுப்பதாக அவர் கூறினார். மேலும், ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் சிலர், தன்னை தலைவர் நாற்காலியில் அமரவிடாமல், தடுத்து மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி ஊரகவளர்ச்சித் துறை மற்றும் ஆட்சியர், முதல்வர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனவும் போலீஸார் அவருக்கு அறிவுரை கூறினர். ஆனால், தனக்கு உரிய தீர்வு கிடைக்காதவரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என 30 நிமிடம் சங்கீதா தர்ணாவை தொடர்ந்தார்.இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி விவரங்களைப் பெறுவதற்காக அவரை ஊரக வளர்ச்சித்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in