Published : 02 Oct 2024 05:41 AM
Last Updated : 02 Oct 2024 05:41 AM

வரலாற்று நாயகர்களின் பிம்பமாய் நிலைத்தவர் சிவாஜி கணேசன்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 97-வதுபிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, சிவாஜி கணேசனின்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்எல்ஏ-க்கள் த.வேலு,ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், செய்தித்துறைச் செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார்.இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின்எக்ஸ் வலைதள பக்கத்தில், ``நடிப்புக்கும்நட்புக்கும் இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். தனது நடிப்பால் மக்களின் மனக்கண்ணில் வரலாற்று நாயகர்களின் பிம்பமாய் நிலைத்துவிட்ட அவரை பிறந்த நாளில் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் சிவாஜி சிலை: இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபு செய்தியாளர்களிடம் கூறும்போது, ``தொடர்ந்து 3-வது ஆண்டாக மரியாதைசெலுத்தும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முதல்வர் எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வருக்கும் திமுகஅரசுக்கும் நன்றி. சிவாஜியின் மிகப்பெரிய ரசிகர் முதல்வர். அவரிடம் திருச்சியில் சிவாஜி சிலை தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளோம். அந்த சிலை விரைவில் திறக்கப்படும் என நம்புகிறோம்'' என்றார்.

தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சிவாஜியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாநில கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் சிவாஜியின் உருவப்படத்துக்கு மரியாதைசெய்தனர்.

பழனிசாமி, அண்ணாமலை புகழாரம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: உணர்ச்சி பூர்வமான நடிப்பாற்றலால் நடிப்புக்கென தனி இலக்கணம் வகுத்தவர். திறன்மிகு தமிழ் வளத்தாலும், சிம்மக்குரலாலும், சர்வதேச அளவில் விருதுகளை வென்ற பெரும் நடிகர் என்ற புகழை பெற்றவர். அவர் பிறந்தநாளில் திரைத்துறையில் அவர் சாதித்த சாதனைகளையும், அவர்தம் தமிழ் பற்றையும் போற்றி வணங்குகிறேன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஈடில்லாத கலைத் திறனால், தமிழ்த் திரையுலகை உலகஅளவில் கொண்டு சேர்த்து, தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்த சிவாஜிகணேசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜியின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x