Published : 02 Oct 2024 05:30 AM
Last Updated : 02 Oct 2024 05:30 AM

சென்ட்ரல் நிலையத்தில் மயங்கி விழுந்த மேற்குவங்க தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: ரயில்வே போலீஸார் விசாரணை

கோப்புப் படம்

சென்னை: மேற்குவங்கம் மாநிலத்தில் மேற்கு மிட்னாபூரில் மங்ரூல் பகுதியைச் சேர்ந்தவர் சமர்கான் (35). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மானிக்கோரி (50), சத்ய பண்டிட்(42), அசித் பண்டிட்(47), கணேஷ் மித்தா(60) உட்பட 11 பேர் கூலி வேலைக்காக, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு வந்தனர். அங்கு 3 நாட்கள் தங்கி வேலை தேடிய நிலையில், அவர்களுக்கு சரியானவேலை கிடைக்காததால், சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.

கெட்டுப்போன உணவு: அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடைக்கு வந்து கடந்த 16-ம் தேதி காத்திருந்தனர். போதிய உணவு எடுத்துக் கொள்ளாததால், 5 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருவர் மயங்கினர். தகவல் அறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீஸார், அவர்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறியதும், நீர்ச்சத்து குறைந்ததும் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் என்று பரிசோதனையில் தெரியவந்தது. ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. மற்றவர்கள் தேறிவந்தனர்.

இந்நிலையில், சமர்கான் என்பவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். ரயில்வே போலீஸார் கூறுகையில்,``உயிரிழந்த சமர்கான் மற்றும் 4 பேர்சி கிச்சைக்கு சில நாட்களுக்கு முன்பு, பொன்னேரியில் ஒரு கடையில் கெட்டுப்போன மீன் மற்றும் உணவை சாப்பிட்டுள்ளனர்.

இதனால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, தேறிவந்தனர். ஆனால், சமர்கானுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்" என்றனர்.

மருத்துவமனை விளக்கம்: இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமர் கான்என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே கவலைக்கிடமாக இருந்தார். அதற்கு முன்னதாக 4 நாள்களுக்கு அவருக்கு வயிற்றுப்போக்கு இருந்தது. மேலும் இரு நாள்களாக வாந்தியும் இருந்துள்ளது. சுயநினைவின்றி, அதீத இதயத் துடிப்புடனும், குறை ரத்த அழுத்தத்துடனும் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே, அவருக்கு சிறுநீரக செயல்திறன் வெகுவாக குறைந்தது. பொதுவாக 1.1-ஆக இருக்க வேண்டிய ரத்த கிரியாட்டினின் (சிறுநீரகத்தின் மூலம் வெளியேற்றப்படும் நச்சு) அளவு11.6-க்கும் மேல் இருந்தது இதையடுத்து அந்த இளைஞருக்கு 7 முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருந்த போதிலும் அவரது ரத்தத்தில்கிருமித் தொற்று ஏற்பட்டு உடல் முழுவதும் பரவியது. அதன் தொடர்ச்சியாக சிறுநீரக செயலிழப்பு, அதன் எதிர்விளைவாக ஏற்பட்ட மூளை செயலிழப்பு காரணமாக சமர் கான் உயிரிழந்தார் இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமைச்சர் அஞ்சலி:உயிரிழந்த சமர்கானின் உடலுக்கு மருத்துவமனையில் தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சமர்கான் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு விமானம் மூலம் மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x