Published : 21 Jan 2014 07:54 AM
Last Updated : 21 Jan 2014 07:54 AM

மாநிலங்களவை தேர்தல்: இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடக்கும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்), ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி (திமுக), நா.பாலகங்கா (அதிமுக), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. இந்த இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை மனு செய்யலாம். 26-ம் தேதி குடியரசு தின விடுமுறை என்பதால் அன்று மனு தாக்கல் இல்லை. 29-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கும். மனுக்களைத் திரும்பப் பெற 31-ம் தேதி கடைசி நாளாகும்.

போட்டி இருப்பின் பிப்ரவரி 7-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 6 இடங்களுக்கு 6 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தால், அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக் கப்படுவர். தேர்தல் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளரும், உதவி தேர்தல் அதிகாரியாக பேரவை துணைச் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பு மனுக்களை மேற்கண்ட இருவரில், யாரேனும் ஒருவரது அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.இவ்வாறு பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x