மதுரையில் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு வாழ்த்து

மதுரையில் துணை முதல்வர் உதயநிதிக்கு, நடிகர் வடிவேலு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் |  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரையில் துணை முதல்வர் உதயநிதிக்கு, நடிகர் வடிவேலு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் |  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: மதுரையில் தங்கியிருந்த துணை முதல்வர் உதயநிதியை நடிகர் வடிவேலு இன்று (அக்.1) காலையில் நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் அரை மணி நேரம் இருவரும் சந்தித்து பேசினர்.

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், செப்.29-ம் தேதி துணை முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு நேற்றிரவு (செப்.30) சென்னையிலிருந்து மதுரைக்கு முதல் முறையாக வருகை தந்தார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர் சிறப்பான முறையில் வரவேற்பளித்தனர். விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோர் உதயநிதியை வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொண்டர்கள் வழங்கிய புத்தகங்கள், சால்வைகளை பெற்றுக்கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று (அக்.1) விருதுநகரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க காலை 10 மணிக்கு மதுரையிலிருந்து உதயநிதி புறப்பட்டார்.

முன்னதாக நடிகர் வடிவேலு, துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் அரை மணி நேரம் இருவரும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு குறித்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை.

நடிகர் வடிவேலுவும், உதயநிதியும், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்ததும், உதயநிதியின் திரைப்பயணத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் ஓர் மைல்கல்லாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in