Last Updated : 20 Jun, 2018 09:29 AM

 

Published : 20 Jun 2018 09:29 AM
Last Updated : 20 Jun 2018 09:29 AM

உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் மின்னலின்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயற்பியல் பேராசிரியர் அறிவுறுத்தல்

மின்னலின்போது செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று இயற்பியல் பேராசிரியர் அறிவுறுத்தி யுள்ளார்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ரமேஷ், துரைப்பாக்கத் தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 6-ம் தேதி சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது ரமேஷ் தனது நண்பர்களுடன் பொன்னேரி அருகே சுண்ணாம்புக்குளம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நின்று கொண்டிருந்தார். மின்னலின் அழகைப் பார்த்த ரமேஷ், தனது செல்போனில் அதைப் புகைப்படம் எடுத்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் ரமேஷ் உடல் கருகி பலியானார்.

இதுகுறித்து இயற்பியல் பேராசிரியர் லட்சுமிகுமார் கூறியதா வது:

மேகக்கூட்டங்கள் மோதுவ தால் மின்னல் மற்றும் இடி உருவாகிறது. ஒரு மேகத்துக்கு உள்ளேயே ஏற்படும் மின்னல், இரண்டு மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னல், மேகங்களுக்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல் என மின்னல்கள் 3 வகைப்படும். இதில், மேகங்களுக்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் மின்னல்தான் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

சாதாரணமாக ஏற்படும் ஒரு மின்னலின் சக்தியானது, குறைந்தபட்சம் 25 ஆயிரம் வோல்ட் முதல் பல கோடி வோல்ட் மின்சாரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும். அதாவது சூரியனின் மேற் பரப்பில் உள்ள 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு சமமாக ஒரு மின்னலின் சக்தி இருக்கும். மின்னலின்போது வெளிப்படும் சக்தியைப் பயன் படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மேகத்தில் இருந்து பூமியை நோக்கி வரும் மின்னல் உயர மான இடத்தில் எந்தப் பகுதியில் மின்சாரத்தை கடத்தும் தன்மை இருக்கிறதோ, அங்கேதான் விழும். அல்லது வெட்ட வெளியில் நேரடியாக விழும். இதனால்தான் உயரமான இடங்களில் இடிதாங்கி வைப்பார்கள். இடிதாங்கியின் மற்றொரு முனை பூமிக்குள் இணைக்கப்பட்டிருக்கும். மின்னலை ஈர்க்கும் இடிதாங்கி அதிலிருக்கும் அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை நேரடியாக பூமிக்குள் செலுத்திவிடும்.

இதேபோல, செல்போனில் இருக்கும் உலோகம் மற்றும் பேட்டரியின் சக்தி மின்னலில் உள்ள மின்சாரத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதனால் மின்னல் ஏற்படும் நேரத்தில் நாம் செல்போனை பயன்படுத்தினால் செல்போனில் விழும் மின்னல், நம்மீது பாய்ந்து நாம் உயிரிழக்க நேரிடும். ரமேஷ் இப்படிதான் மரணம் அடைந்துள்ளார். கனடாவின் வான்கூவர் பகுதியைச் சேர்ந்தவர் செல்போனில் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்திருக்கிறார்.

எனவே, மின்னல் ஏற்படும் நேரத்தில் செல்போனை பயன் படுத்தாமல் இருப்பதும், திறந்தவெளியில் நடந்து செல்லாமல் இருப்பதும் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்

மின்னலால் ஏற்பட்ட பேரழிவுகள்

மின்னலை ஆராய்ச்சி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் ரிச்மேன் மின்னல் தாக்கி இறந்தார். 1769-ம் ஆண்டு இத்தாலியின் வெடி மருந்து குடோனில் மின்னல் தாக்கியதில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியானார்கள். பாரீஸின் ஈபிள் கோபுரத்தை 1902-ம் ஆண்டு மின்னல் தாக்கியது. 1994-ம் ஆண்டு எகிப்தில் எரிபொருள் டேங்கர் லாரியில் மின்னல் தாக்கியதில் சுமார் 450 பேர் இறந்து விட்டனர். விமானங்களும் சில நேரங்களில் மின்னல் தாக்குதலில் சிக்கும்.

இடியின் சத்தத்தைக் கேட்டு ஏற்படும் மிதமிஞ்சிய பயத்துக்கு அஸ்ட்ராபோபியா என்று பெயர். உலகத்திலேயே மின்னலின் தாக்கு தல் அதிகம் நடைபெறுவது ஆப்பிரிகா கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x