Published : 02 Jun 2018 10:00 AM
Last Updated : 02 Jun 2018 10:00 AM

போலீஸ் கஷ்டம் தெரியுதா உங்களுக்கு?: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பெண் ஓருவர் வெளியிட்டுள்ள ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸாரின் துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டக்களத்தில் போலீஸார் பலரும் காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டை கண்டித்து போலீஸாருக்கு எதிராக பல தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பெண் ஒருவர் தன்னை பெண் காவலர் என்று கூறிக்கொண்டு, தனது உள்ளக் குமுறலை ஆடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அது தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

தூத்துக்குடி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல். நானும் ஒரு பெண் காவலர்தான். தூத்துக்குடி போராட்டக் களத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் பலர் இஷ்டத்துக்கு பேசுகின்றனர். தற்போது ஸ்டெர்லைட்டை மூடிட்டாங்க. பிரச்சினை முடிஞ்சிடுச்சி. போராட்டம் செய்தவர்கள் எல்லாத்தையும் முடிச்சிட்டாங்க. இப்ப காவல் துறை என்ன பண்ணும்.. அடி வாங்குனவன், அடிபட்டவன், டூட்டி பாக்குறவன்.. போற எடத்துல சாப்பாடு கஷ்டம், ஸ்டென்த் இல்ல.. வீட்டுக்கு போக முடியல, பொண்டாட்டி புள்ளைய பாக்க முடியல. சாயங்காலம் 4 மணிக்கு டூட்டின்னா காலைல 10 மணிக்கே வெயில்ல நிக்க வெச்சிடுறாங்க. இவ்வளவு கஷ்டம் இருக்கே இதைப்பத்தி பொதுமக்கள் யாராவது நெனச்சி பாத்தீங்களா?

போலீஸ் ஒரு சட்டம் போடுதுன்னா அதை மதிக்கிறதும் கிடையாது.. பின்பற்றுவதும் கிடையாது. ஆனா, போலீஸ்காரன் கேட்டா மட்டும் இவன் என்னத்த கேக்குறதுன்னு போறீங்க.. ஏன் காவல் துறை சொன்னா கேக்க மாட்றீங்க.. அதனாலதான பிரச்சினை வருது. முதல்ல போலீஸுக்கே பாதுகாப்பு கிடையாது. ஒரே ஒரு மணி நேரம் நாங்க எந்த வேலையும் பார்க்காம இருக்க முடியுமா? இருந்து பார்க்கட்டுமா? நைட்டும் பகலுமா உங்களுக்காக டூட்டி பார்த்துக்கிட்டு இருக்கோம்.

தூத்துக்குடியில போயி நாங்க சாப்பிடல...சாப்பிட்டே ரெண்டு நாளாச்சி.. தண்ணி இல்ல. எதுவும் இல்ல.. எவ்ளோ பிரச்சினை. எல்லா பிரச்சினையையும் மீறி 99 நாள் பாதுகாப்பு கொடுக்க தெரிஞ்ச எங்களுக்கு 100-வது நாள் பாதுகாப்பு கொடுக்கத் தெரியாதா?

யூனிபார்ம் போட்டுட்டு நிற்கிறவங்கள அந்த இடத்தில் மரியாதை கொடுக்காமல் கல் எடுத்து அடிப்பீங்க.. சுட்டா ஏன் சுட்டீங்கன்னு கேட்பீங்க. முதல்ல போலீஸுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய மக்கள் எப்ப கொடுக்குறாங்களோ, அப்பதான் தமிழ்நாடு உருப்படும். அதுவரைக்கும் உருப்படாது. இப்படித்தான் குட்டிச்சுவரா போகும்.

இருக்கற விஐபி, மந்திரி, சாதாரண எம்எல்ஏவுல இருந்து, எம்.பி.யில இருந்து.. ஒரு விஐபிகூட எஸ்கார்ட் போனா அவங்கபாட்டுக்கு இறங்கி உள்ள போவாங்க, பேசுவாங்க.. போலீஸ் என்ன நாயா? அவங்க ரிட்டர்ன் வர வரைக்கும் நடுரோட்டுல நின்னுக்கிட்டே இருக்கணும். உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்த நாங்க சாகணுமா? இவ்ளோ கஷ்டம் இருக்கு. அதனால இதையும் ஒரு பதிவா நான் போடுறேன்.. இதே மாதிரி ஒவ்வொருத்தரும் அவங்கவங்க ஆடியோவ வெளியிடுங்க. அப்பதான் காவல் துறையோட பிரச்சினைங்க பொதுமக்களுக்கும் தெரியும். வக்கீலுங்க.. எம்.பி., எம்எல்ஏங்களுக்கும் தெரியும். அப்பதான் காவல் துறையை மதிப்பாங்க..

போலீஸ் வேலைக்கு வர்றது எவ்வளவு கஷ்டம்னு வந்தவங்கள கேட்டுப்பாருங்க தெரியும். எங்க கோரிக்கை என்ன? டூட்டின்னா டூட்டி, ரெஸ்ட்டுன்னா ரெஸ்ட். முதல்ல பொதுமக்கள் போலீஸை மதிக்கிறாங்களான்னு பாருங்க. அப்புறமா மேலதிகாரியில இருந்து கீழ் அதிகாரிங்க வரைக்கும் கேள்வி கேக்குறத நிறுத்துவீங்க. அதுவரைக்கும் நிறுத்தமாட்டீங்க.

செஞ்சா ஏன் செஞ்சீங்கன்னு கேக்கறீங்க. செய்யலைன்னா ஏன் செய்யலைன்னு கேக்குறீங்க.. இது என்ன பொழுதுபோக்கா காவல்துறை உங்களுக்கு? இதெல்லாம் எப்போ மாறுமோ தெரியாது. ஒவ்வொரு போலீஸும் இதுபோல பதிவை வெளியிடுங்க. அப்பதான் போலீஸ்னா ஒரு ரெஸ்பான்ஸ் இருக்கும். பொம்பள போலீஸ்னா ஒரு மரியாதை இருக்கும். காக்கிச்சட்ட மேல கை வைக்கிற ஒவ்வொருத்தனும் வருத்தப்படணும்.

குடும்பத்தையே விட்டுவிட்டு வந்து பணி செய்கிறோம். காவல் துறையினர் ஒவ்வொருத்தருக்கும் ரூ.1 லட்சம் சம்பளம் கொடுத்தால்கூட பத்தாது. 8 மணி நேரம் வேலை பார்க்குறோம்னு நெனக்கிறீங்களா? 24 மணி நேரமும் வேலை பார்க்குறோம். நல்லது கெட்டதுன்னா நீங்க வீட்டில் இருப்பீங்க... நாங்கதான் பணிக்கு செல்வோம். இந்த கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியுது.

இவ்வாறு அந்தப் பெண் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x