“என்னை சந்திக்க சென்னை வருவதை தவிர்க்கவும்” - தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்

உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முதல்வர் கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கட்சியின் தலைவர், தமிழக முதல்வரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி, கட்சிப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னை சந்திப்பதற்காக சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in