Published : 30 Sep 2024 05:44 AM
Last Updated : 30 Sep 2024 05:44 AM
சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தளபதியாக பதவி வகித்து வந்த ஐ.ஜி. டோனி மைக்கேல், கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதன்படி, விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட கிழக்கு - வடகிழக்கு மண்டல கடலோர காவல் படை தளபதியாக அவர் செயல்படுவார். இதன்மூலம் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பிராந்தியங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார்.
சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த டோனி மைக்கேல், 1990 ஜூலை 6-ம்தேதி கடலோர காவல் படையில் சேர்ந்தார். படிப்படியாக உயர்வு பெற்று, கிழக்கு பகுதியின் தலைமைபொறுப்பை கடந்த 2023 நவம்பரில் ஏற்றார்.
அவரது தலைமையில் மிக குறுகிய காலகட்டத்தில் கடலோர காவல் படையின் கிழக்கு பகுதி பலமுக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. சென்னை, தூத்துக்குடி வெள்ளத்தின்போது மேற்கொண்ட மீட்பு நிவாரண பணிகள், 2023 டிசம்பரில் சென்னை எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்றும் பணியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மேற்கொண்டது, சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல், இந்தியா - இலங்கை கடல் எல்லை அருகே போதைப் பொருள் கடத்தல் ஆகிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
சென்னையில் புதிய நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் பிராந்திய கடல்மாசு அகற்று மையம், புதுச்சேரியில் கடலோர காவல் படை வான் நடவடிக்கை வளாகம் தொடங்குதல் போன்ற பணிகளும் இவரது பணிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.
மும்பை அருகே வணிக கப்பலில்தீயணைக்கும் பணியில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக டோனி மைக்கேலுக்கு 2012 செப்டம்பரில் தத்ரக்ஷக் பதக்கமும், அவரது சிறப்பான சேவைக்காக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி குடியரசுத் தலைவரின் தத்ரக்ஷக் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT