Published : 30 Sep 2024 05:45 AM
Last Updated : 30 Sep 2024 05:45 AM

பழங்குடி மொழிகளை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது: ‘தொல்குடி’ மாநாட்டில் நிதி துறை செயலர் உதயசந்திரன் வலியுறுத்தல்

சென்னை: பழங்குடி மொழிகளை பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது என்று நிதித்துறைச் செயலர் த.உதயசந்திரன் கூறினார். தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைசார்பில் ‘தொல்குடி’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் மாநாட்டை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சென்னையில் தொடங்கிவைத்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. அழிந்துவரும் நிலையில் உள்ள பழங்குடியினர் மொழிகள், வாய்மொழி வழக்காறுகள், அம்மொழிகளை கற்பித்தலுக்கும் பயில்வதற்குமான ஆதாரங்கள், அவற்றைஆவணப்படுத்தல், பழங்குடியினர் மொழிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கு நவீனத் தொழில்நுட்ப முறைகளையும், ஊடகங்களையும் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளில் அறிஞர்கள் உரையாற்றினர். இதில்,சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் ஜி.லட்சுமி பிரியா வரவேற்றார். நிதித் துறைச் செயலர் த.உதயசந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

மொழி என்பது வெறும் எழுத்துகளைச் சார்ந்த கருவி அல்ல. பண்பாட்டுக் களஞ்சியமாகும். நமதுதமிழ் மொழி 3,300 ஆண்டுகள்பழமையானது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் காணப்படும் வேலன் வெறியாட்டு, பத்தினிவழிபாடு போன்ற பண்பாட்டுக் கூறுகள் தற்போதும் கேரளத்திலும், இலங்கையிலும் வேறு பெயர்களில் வழக்கத்தில் உள்ளன. நம் சமூகத்தில் பேசப்படும் பழங்குடி மொழிகளைப் பாதுகாக்கும் கடமை நமக்குள்ளது. பழங்குடியினர் நலனுக்காக செயல்படுவதுடன், தங்களது பண்பாடு குறித்த பெருமிதத்தை அவர்கள் இழந்துவிடாமல் பாதுகாப்பதும் அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசும்போது, "பழங்குடியினரின் பண்பாடு எவ்வளவு உயர்ந்தது என்பதை பொதுசமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.பழங்குடியினர் மக்கள் நலனுக்காகஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் 29-ம் பிரிவு, சிறுபான்மையினரின் கல்வி, மொழி, வரிவடிவம்போன்றவற்றுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. கிராம இந்தியா, சேரிகள் உள்ள இந்தியா, பழங்குடிகள் வாழும் இந்தியா ஆகிய மூன்றின் வளர்ச்சியும் உறுதிப்பட வேண்டும்” என்றார். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ்இயக்குநர் ராஜா சாமுவேல் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x