Published : 30 Sep 2024 06:06 AM
Last Updated : 30 Sep 2024 06:06 AM

சென்னையில் கட்டிட கழிவுகளை கொட்ட அங்கீகரிக்கப்பட்ட 15 இடங்களை அறிவித்தது மாநகராட்சி

சென்னை: சென்னையில் கட்டிடக் கழிவுகளை கொட்ட அங்கீகரிக்கப்பட்ட 15 இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கட்டிட கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

இதைத் தடுக்கும் பொருட்டு,இக்கழிவுகளை சேகரித்து செல்வதில் ஈடுபட்டுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அத்தகைய கழிவுகளை, மாநகராட்சியால் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் எவ்விதமான கட்டணமுமின்றி இலவசமாக கொட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு இடம் என 15 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருவொற்றியூர் மண்டலம் - 7-வது வார்டு சாத்தாங்காடு பக்கிங்ஹாம் கால்வாய் சாலை, மணலி மண்டலம் -21-வது வார்டு காமராஜர் சாலை, மாதவரம்மண்டலம் - 26-வது வார்டு மாதவரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிஎம்டிஏ டிரக் முனையம், தண்டையார்பேட்டை மண்டலம் - 37-வது வார்டு மகாகவி பாரதி நகர் வடக்கு நிழல் சாலை, ராயபுரம் மண்டலம் - 58-வது வார்டு சூளை அவதானம் பாப்பையா சாலையில் உள்ள பழைய கால்நடை கிடங்கு, திரு.வி.க.நகர்மண்டலம் - மேற்கூறிய சூளையில் 70-வதுவார்டு பகுதி ஆகிய இடங்கள் கட்டிட கழிவுகளை கொட்டும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அம்பத்தூர் மண்டலம் - 91-வது வார்டு முகப்பேர் ஏரி திட்டப் பகுதியில் கவிமணி சாலை, அண்ணாநகர் மண்டலம் - 101-வதுவார்டு செனாய் நகர் முதல் பிரதான சாலை,தேனாம்பேட்டை மண்டலம் - 120-வதுவார்டு, லாய்ட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம் - 127-வது வார்டு, ஜாபர்கான்பேட்டை - குரு சிவா தெரு எஸ்.எம்.பிளாக், வளசரவாக்கம் மண்டலம் - 155-வது வார்டு நடராஜன் சாலை மற்றும் பாரதிசாலை சந்திப்பு (ராமாபுரம் ஏரி அருகில்), ஆலந்தூர் மண்டலம் - 158-வது வார்டு நந்தம்பாக்கம் குப்பை மாற்று வளாகம், அடையார் மண்டலம் - 174-வது வார்டு வேளச்சேரி பிரதானசாலை மயான பூமிஅருகில், பெருங்குடி மண்டலம் - 186-வதுவார்டு ரேடியல் சாலை பெருங்குடி குப்பைகொட்டும் வளாகம், சோழிங்கநல்லூர் மண்டலம் - 197-வது வார்டு கங்கையம்மன் கோவில் தெரு விரிவாக்கம், காரப்பாக்கம் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அருகில் ஆகிய இடங்களும் கட்டிட கழிவுகள் கொட்டும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டிட கழிவுகளை ஏற்றிச் செல்லும் விருப்பமுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கான இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பாளர்களாக பதிவு செய்திட திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x