Published : 24 Jun 2018 12:24 PM
Last Updated : 24 Jun 2018 12:24 PM

புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன்

செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் இத்தாலி வீரர் லூக்கா முரானியை வீழ்த்தி இந்தப் பெருமையை பிரக்னாநந்தா பெற்றார். 8 சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தப் போட்டியில் 6.5 புள்ளிகளை பிரக்னாநந்தா பெற்றுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம்பெற 2500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் டிராவிசியோ நகரில் நடந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்காக பிரக்னாநந்தா பரிந்துரைக்கப்பட்டார். இரண்டாவது முறையாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிரீஸ் நாட்டில் நடந்த ஹெர்காலியன் பிஸர் நினைவு செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டருக்காக பரிந்துரைப்பட்டு அதில் பிரக்னாநந்தா வெற்றி பெற்றார்.

உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்னாநந்தா தவறவிட்டார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாக்கின் தனது 12வயது,7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை 2002-ம் ஆண்டு பெற்றார்.

தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் பிரக்னாநந்தா 12 மாதங்கள், 10 மாதங்களில் பெற்றதால், இந்தப் பெருமையைத் தவறவிட்டார்.

இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த பிரம்மராஜன் நெகி தனது 13 வயது 4 மாதங்கள் 22 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரக்னாநந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதற்கு செஸ் சாம்பியன் விஸ்வநான் ஆனந்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், பிரக்னாநந்தா என்னை அவரின் விளையாட்டுத் திறமையைல் ஈர்த்துவிட்டார். அவரின் வலிமையான விளையாட்டும், பொறுமையும் திறமையும், எதிர் வீரரை எளிதாக வீழ்த்தும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரக்னாநந்தா 10 வயது, 9 மாதங்கள் இருக்கும்போது, சர்வதேச அளவில் இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார்.

9-ம் வகுப்பு படிக்கும் பிரக்னாநந்தா சென்னையில் பாடியில் வசித்து வருகிறார்.இவரின் தந்தை ரமேஷ், தாயார் நாகலட்சுமி, சகோதரி, ஆர்.வைஷாலி ஆவார்.

உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள்.

1. செர்ஜி கர்ஜாக்கின்(உக்ரைன்) 12 வயது, 7 மாதங்கள்

2. ஆர். பிரக்னாநந்தா(இந்தியா) 12 வயது, 10 மாதங்கள்

3. நோடிர்பெக் அபுதஸ்த்ரோவ் (உஸ்பெகிஸ்தான்) 13 வயது, ஒரு மாதம்

4. பரிமராஜன் நெகி (இந்தியா) 13 வயது, 4 மாதங்கள்

5. மாக்னஸ் கார்ல்ஸன்(நார்வே) 13 வயது, 4 மாதங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x