Published : 10 Aug 2014 02:28 PM
Last Updated : 10 Aug 2014 02:28 PM

தாமிரவருணியில் பாக்டீரியா பெருகுவது தடுப்பு: காரையாறு விழாவில் விழிப்புணர்வால் கிடைத்த வெற்றி

காரையாறு சொரிமுத்து அய்ய னார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவின்போது, தாமிர வருணி ஆற்றில் அதிகளவில் கழிவு சேரும். இதனால், `இ.கோலி’ எனப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தி வந்தன. இவ்வாண்டு அரசுத்துறைகள் மேற் கொண்ட விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடுகளால், இத்தகைய மாசுபாடு குறைந்திருப்பது ஆய்வில் தெளிவாகியுள்ளது.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல் அறிவியல் மைய பேராசிரியர் ஏ.ஜி.முருகேசன் தலைமையிலான குழுவினர் கடந்த சில ஆண்டுகளாக, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு முன்னரும், பின்னரும் தாமிரவருணி ஆற்று நீர் மாதிரிகளை சேகரித்து, அதிலுள்ள `இ.கோலி’ பாக்டீரியாக்கள் மற்றும் கழிவுகளை ஆய்வுகள் மூலம் கணக்கிட்டு வருகிறார்கள்.

ஆரோக்கிய தகவல்

இவ்வாண்டு ஜூலையில் நடைபெற்ற விழாவுக்கு பின்னர் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் இ.கோலி பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை திருவிழாவை யொட்டி 2 வாரம் மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும், தன்னார்வ அமைப்புகளும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளால் தாமிரவருணி யில் கழிவுகள் சேருவது பெருமளவு தடுக்கப்பட்டன. மனித கழிவுகள் சேருவதும் பெருமளவு தடுக்கப்பட்டது. இதனால், பாக்டீரியாக்கள் பெருக்கமும் குறைந்திருந்ததாக முருகேசன் தெரிவித்தார்.

பாக்டீரியாக்கள்

அவர் கூறும்போது,

ஆடி அமாவாசைக்கு 3 நாட்களுக்கு முன் 100 மி.லி. தண்ணீரில் 11 முதல் 75 இ.கோலி பாக்டீரியாக்கள் இருந்தன. ஆடி அமாவாசை திருவிழாவுக்குப்பின் இது 14 முதல் 950 ஆக அதிகரித்திருந்தது. சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே இந்த எண்ணிக்கை 640 ஆகவும், பாபநாசம் பகுதியில் 950 ஆகவும் இருந்தது.

அமாவாசை அன்று கோயில் அருகே எண்ணிக்கை 750 ஆக இருந்தது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவு. கடந்த 2004 முதல் 2011 வரையில் ஆடி அமாவாசை தினத்தில், 1,100க்கும் அதிகமான இ.கோலி பாக்டீரியாக்கள் 100 மி.லி தண்ணீரில் இருந்தன.

கடந்த 2013-ல் 2,400-க்கும் அதிகமாக இருந்தது. இவ்வாண்டு 420-ல் இருந்து 2,400-க்குள்தான் எண்ணிக்கை இருந்தது,என்றார்

என்ன செய்யும் `இ.கோலி’?

மாசுபட்ட தண்ணீரால் பரவும் நோய்களால் இந்தியாவில் 37.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வயிற்றுப்போக்கு நோயால் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் `இ.கோலி’ பாக்டீரியா. டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் மாசுபட்ட தண்ணீரால் ஏற்படுகிறது.

தண்ணீரில் மனிதக் கழிவு, சாக்கடைக் கழிவு சேர்வதால், `இ.கோலி’ பாக்டீ ரியா உற்பத்தியாகிறது. தாமிர வருணியில் இதன் பரவும் விகிதம் குறைக்கப்பட்டி ருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x