Published : 08 Jun 2018 08:07 AM
Last Updated : 08 Jun 2018 08:07 AM

துப்பாக்கிச் சூட்டில் பலியான அனைவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு: நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான அனைவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 16 நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை முழுமையாக திரும்பியுள்ளது. நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடைசியாக தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜின் உடல் நேற்று காலை 10 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் அந்தோணி செல்வராஜின் உறவினரான சினிமா சண்டை கலைஞர் செல்வா, இயக்குநர் ஹரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

16 நாட்களுக்கு பிறகு

நகரில் நேற்று முழுமையாக இயல்பு நிலை திரும்பியது. தூத்துக்குடியில் மீன்பிடி தடை காலம் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் ஏற்கெனவே மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடந்த மாதம் 22-ம் தேதி முதல் திரேஸ்புரம், வெள்ளபட்டி, தருவைகுளம், வைப்பாறு, வேம்பாறு, புன்னக்காயல் ஆகிய கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், 16 நாட்களுக்கு பிறகு நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x