Published : 12 Jun 2018 08:43 AM
Last Updated : 12 Jun 2018 08:43 AM

விளைநிலங்கள் வழியே குழாய் பதித்துகெயில் திட்டத்தை அமல்படுத்தினால் போராட்டம்: கொமதேக ஈஸ்வரன் எச்சரிக்கை

விளைநிலங்கள் வழியே குழாய்களை பதித்து கெயில் நிறுவனம் தனது திட்டத்தை செயல்படுத்தினால், கொங்கு மண்டலத்தில் போராட்டம் வெடிக்கும் என கொமதேக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான எரிவாயு குழாயை விவசாய விளைநிலங்கள் வழியாக பதிக்க ஆரம்பிக்கப்பட்டபோது, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த திட்டத்தை விளைநிலங்கள் வழியே செயல்படுத்தினால், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, மாற்று வழியான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய்களை அமைத்து திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாயை பதிக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.

தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும், 3 ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படும் என்று கெயில் தென்மண்டல செயல் இயக்குநர் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல், மீண்டும் விளைநிலங்கள் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாயை பதிக்க முயன்றால், கொங்கு மண்டலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x