

விழுப்புரம்: மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். அரசு நிலத்தை இவர்ஆக்கிரமித்துள்ளதாக மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நேற்றுமுன்தினம் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் முடிவு ஏற்படாததால், தனது நிலத்தை 23 பேர் சேர்ந்து அபகரிக்க முயல்வதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, திடீரென மோகன்ராஜ் தனது உடலில்பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அங்கிருந்த போலீஸார்அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்ராஜ், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராமதாஸ் வலியுறுத்தல்: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி மற்றும் விவசாயியான மோகன்ராஜ், தனது குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தைப்பறிக்க அரசியல் கட்சி ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம்உடைந்து, அதற்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும்அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோகன்ராஜ் விவசாயம் செய்துவந்த நிலம், அவரது குடும்பத்துக்குச் சொந்தமானது. அதில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இல்லை என்று வருவாய்த் துறைஆவணங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் நிலத்தை நேரில் அளந்து உறுதி செய்துள்ளனர்.
அவ்வாறு இருக்கும்போது மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தனி நபர் ஒருவரின் நிலப்பறிப்புக்கு ஆதரவாகக் களமிறங்கி, பொய்யான தகவல்களை அடிப்படையாக வைத்து நெருக்கடி கொடுத்து,ஏழை விவசாயி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாகிஇருப்பது கண்டிக்கத்தக்கது.
தனக்கு தொல்லை கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட 23 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துவிட்டு, மோகன்ராஜ் அங்கேயே பெட்ரோல் ஊற்றிதீக்குளித்துள்ளார். அவரது தற்கொலைக்குக் காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. எனவே, மோகன்ராஜ் தற்கொலைக்குக் காரணமான 23 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்வதுடன், சட்டப்படியான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு சார்பில் வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.