Published : 10 Jun 2018 09:44 AM
Last Updated : 10 Jun 2018 09:44 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 15 மாதத்தில் 210 பேருக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை: ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் தகவல்

இந்தியாவில் மூளைக் கட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித் தனர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட மேரி (35), முத்துசாமி (58), ஸ்ரீதர் (26) உள்ளிட்ட 5 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ஜேக்கப் கிராண்ட், பேராசிரியர் டாக்டர் எம்.எம். சங்கர், டாக்டர்கள் அரவிந்த், பாஸ்கர், ராஜ்குமார், சரவணன் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அவர்களின் மூளையில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இந்த மூளைக் கட்டி குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஜேக்கப் கிராண்ட், பேராசிரியர் டாக்டர் எம்.எம். சங்கர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மரபுவழி, புகையிலை பழக்கம்

ஆண்டுதோறும் ஜூன் 8-ம் தேதி உலக மூளைக் கட்டி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி முதன்முதலில் ஜெர்மனியில் கடைப்பிடிக்கப்பட்ட தினத்தை, இன்று உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தியாவில் மூளைக் கட்டி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுவும் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மூளையில் ஏற்படும் கட்டி புற்றுநோய் கட்டியாகவும், புற்றுநோய் அல்லாத கட்டியாகவும் இருக்கலாம். இந்த மூளைக் கட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வருவதற்கு வாய்ப்புள்ளது. மரபுவழி, புகையிலை போன்ற பழக்க வழக்கங்களால் மூளைக் கட்டி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், உறுதியான காரணம் இன்னும் சொல்லப்படவில்லை.

அறிகுறிகள்

அதிகமான தலைவலி, தொடர் வாந்தி, பார்வை இழத்தல், கை மற்றும் கால்கள் செயலிழந்து போகுதல், பேச்சுத் திறன், காது கேளாமை, தொடு உணர்வு குறைதல், வலி ஏற்படுதல் போன்றவை மூளைக் கட்டிக்கான அறிகுறிகளாக உள்ளன. அறிகுறிகள் தென்பட்டவுடன் ஆரம்பத்திலேயே வந்தால் மருத்துவ பரிசோதனை செய்து மூளைக் கட்டி இருப்பதை உறுதி செய்து, அதனை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, மருந்துகள் மூலம் அகற்றிவிடலாம்.

போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானோர் காலதாமதமாகவே சிகிச்சைக்கு வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மூளையில் இருக்கும் புற்றுநோய் கட்டி 4 விதமாக பிரிக்கப்படுகிறது. முதல் நிலையில் கண்டுபிடித்து கட்டியை அகற்றிவிட்டால், முழுவதுமாக குணப்படுத்திவிட முடியும். அடுத்தடுத்த நிலை என்றால், கட்டியை அகற்றினாலும் தொடர்ந்து சிகிச்சைப் பெற வேண்டியிருகும்.

தனியாரில் ரூ.8 லட்சம்

மூளைக் கட்டிக்கான சிகிச்சை என்பது விலை உயர்ந்து மருத்துவக் கருவிகளைக் கொண்டு அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 15 மாதங்களில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த 210 பேருக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.8 லட்சம் வரை செலவாகும். ஆனாலும், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூளைக் கட்டிக்கு சிகிச்சை அளிக்க முன்வருவதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின்போது மருத்துவமனை டீன் பொன்னம்பல நமசிவாயம், ஆர்எம்ஓ ரமேஷ், குணமடைந்த நோயாளிகள், டாக்டர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x