Published : 28 Sep 2024 05:40 AM
Last Updated : 28 Sep 2024 05:40 AM

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையின் ‘கேத் லேப்’பில் 10 ஆண்டுகளில் 25,500 சிகிச்சைகள்: இதய இடையீட்டு சிகிச்சை பிரிவு சாதனை

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை பிரிவான கேத் லேப் ஆய்வகத்தில் 10 ஆண்டுகளில் 25,500 சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

உலக இதய நல தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதய நலத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தலைமையில் நடந்த பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாணவிகளின் விழிப்புணர்வு மவுனமொழி நாடகம், இதயம் நுரையீரல் மீட்பு முதலுதவி செயல்முறை பயிற்சி நடந்தது. இந்த நிகழ்வுகளில் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார், நிலைய மருத்துவஅதிகாரி தளவாய் சுந்தரம், இதய நலசிகிச்சைத் துறை தலைவர் கார்த்திகேயன், இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணரும், பேராசிரியருமான செசிலி மேரி மெஜல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி கூறியதாவது: இந்த மருத்துவமனையில் இதயவியல், புற்றுநோயியல், நரம்பியல் உட்பட10 உயர் சிறப்பு சிகிச்சைத் துறைகளும், 6 சிறப்பு சிகிச்சைத் துறைகளும் உள்ளன.அதில், இதய இடையீட்டு சிகிச்சைப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும்25,500 சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சையின்றி கால் அல்லது கை பகுதியில் சிறு துளையிட்டு ரத்தநாளங்கள் வழியாக இதய பாதிப்புகள் குணப்படுத்தப்பட்டுள்ளன. சீரற்ற இதயதுடிப்பு உள்ளவர்களுக்கும், குறிப்பாக இதயத் துடிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும் எலெக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி மற்றும் அப்ளேசன் எனப்படும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. மொத்தம் 226 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் மூலமாக இதய துடிப்பு சீராக்கப்பட்டுள்ளது.

மகா தமனி வால்வு மாற்று சிகிச்சை 6 பேருக்கு ரத்த நாளங்களின் வழியாகவெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதய குழாயில் உள்ள துவாரங்களை அறுவை சிகிச்சை இல்லாமல் அடைக்கும் ‘ஏஎஸ்டி' எனப்படும் சிகிச்சை 276 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில்,அதிக அளவில் இளம்பெண்கள்பயனடைந்துள்ளனர்.

அதேபோல, இதயத்தின் மிட்ரல் வால்வு சுருக்கத்தை விரிவடையச் செய்யும் பிடிஎம்சி சிகிச்சை மூலம் 519 பேர் பயனடைந்துள்ளனர். மகாதமனி கிழிசலை சரிசெய்யும் ஆர்எஸ்ஓவி என்ற சிகிச்சை 11 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. 73 வயதான விவசாயி ஒருவருக்கு அந்த சிகிச்சைமூலம் ஏடிஓ என்ற உபகரணம் பொருத்தப்பட்டு அப்பிரச்சினை சரிசெய்யப்பட்டது. இதுபோன்ற சிகிச்சையானது 70 வயதைக் கடந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்படுவது உலகிலேயே இது முதல்முறை. இதைப் பாராட்டி ஐரோப்பிய சுகாதார இதழ் கட்டுரையும் வெளியிட்டிருந்தது.

இவைதவிர, பேஸ்மேக்கர் உள்ளிட்ட இதயத் துடிப்பை சீராக்கும் கருவிகளைப் பொருத்தும் சிகிச்சைகளை மருத்துவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சைநிபுணர்கள், மருத்துவர் செசிலி மேரிமெஜல்லா, மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் சாத்தியமாக்கியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x