Published : 20 Jun 2018 03:39 PM
Last Updated : 20 Jun 2018 03:39 PM

திருடர்கள் பலவிதம் ஈரானியக் கொள்ளையர்கள் ஒருவிதம்: சில சுவாரஸ்யத் தகவல்கள்

திருடர்களில் பலவிதம் உள்ளனர். அதில் ஈரானியக் கொள்ளையர்கள் ஒருவிதம். இவர்கள் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு நாட்களில் மட்டும் தொடர் செயின் பறிப்பு மூலம் 104 சவரன் நகைகளைப் பறித்துச்சென்ற கொள்ளையர்களை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேமானந்த சின்ஹா தலைமையிலான போலீஸார் பிடித்துள்ளனர். ஈரானியக் கொள்ளையர்கள் என்றழைக்கப்பட்டவர்கள் தனி ரகம்.

செயின் பறிப்பை உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே செய்வார்கள் என்று போலீஸார் கருதி வந்த நிலையில் இதில் ஈரானியக் கொள்ளையர்களும் ஈடுபட்டிருப்பது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு வகை குற்றவாளிக்கும் ஒவ்வொரு நடைமுறை உண்டு. வீட்டின் பூட்டை உடைத்து திருடுபவர் வழிப்பறி செய்ய மாட்டார். வழிப்பறி செய்பவர்கள் வீடுபுகுந்து திருட மாட்டார்கள்.

வீடு புகுந்து திருடுபவர்களிலும் பலவிதம் உள்ளனர். பீரோ புல்லிங் என தனி வகையான கொள்ளையர்கள் உள்ளனர். 2009-களில் சென்னை புறநகர் பகுதியில் போலீஸாருக்கு சவாலாக பீரோ புல்லிங் கொள்ளையர்கள் இருந்தனர். இதே போன்று கவனத்தை திசை திருப்பி திருடும் கூட்டம் ஒன்று சென்னையில் ஊடுருவி போலீஸாரை திணறடித்தது. சிபிஐ அதிகாரி போல், போலீஸ்போல், வழிப்பறி நடக்கிறது நகையை கழற்றி பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள் என பொட்டலம் மடித்துக் கொடுப்பது போல் ஏமாற்றி பறித்துச்செல்லும் கூட்டம் ஒன்றும் இருந்தது. இவர்கள் ஈரானியக் கொள்ளையர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் தொடர்ச்சியாக, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கவனத்தை திசைதிருப்பி வழிப்பறியில் ஈடுபட்டது போலீஸாருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. போலீஸார் உள்ளூர் நபர்களை தேடிக்கொண்டிருக்க ஒரு சின்ன க்ளூ மூலம் குற்றவாளி சிக்கினார். அவர் மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், அம்பிவேலியைச் சேர்ந்த, ஆசிப் சபீர் (50) என்பவர் ஆவார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பூர்வீகம் ஈரான் நாடு என்பது தெரியவந்தது. 1970-களில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், ஈரான் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம், அம்பிவேலியில் குடியேறியதாகவும் பின்னர் ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில், காரமடை, திருப்பத்தூர், மணப்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இடம் மாறியதாகவும் தெரிவித்தார். இவர்களது பிரதான தொழிலே வழிப்பறிதான்.

சிபிஐ அதிகாரிகள், போலீஸார் போல் நடித்து கொள்ளையடிப்பதே இவர்கள் ஸ்டைல். இவர்கள் ஸ்டைலே விமானத்தில் பறந்து வந்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு பின்னர் ஒரு வாரம் தங்கி, வேலை முடிந்ததும், மீண்டும் விமானத்தில் பறந்து சென்று விடுவார்கள். அல்லது சொந்தமாக கார் வைத்திருப்பார்கள். காரில் வந்து வழிப்பறி செய்துவிட்டு பின்னர் காரிலேயே சொந்த ஊருக்கு சென்றுவிடுவார்கள். சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பலமொழிகள் தெரியும். அந்த சம்பவத்தில் போலீஸார் ஈரானியக் கொள்ளையர்கள் 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அதன் பின்னர் தற்போது 5 பேர் பிடிபட்டிருக்கின்றனர். இவர்கள் கூட்டாளிகளும் பிடிபடுவார்கள். இதன் மூலம் சென்னையில் செயின் பறிப்புகள் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீரமுடன் விவேகமாக கொள்ளையர்களைப் பொறிவைத்து அவர்கள் காரில் சென்றதைக் கச்சிதமாக கண்டுபிடித்து தானே முன்னின்று துரத்திச் சென்று பிடித்த வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேமானந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x