

விழுப்புரம்: செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்ய 'யுனெஸ்கோ' தேர்வுக் குழு பிரதிநிதியான வாஜாங் லீ தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.
உலக சுற்றுலா தினம் ஆண்டு தோறும் செப். 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கலாச்சார மரபுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சுற்றுலாவை பரந்த நோக்கில் அணுகுவதே உலக சுற்றுலா தினத்தின் நோக்கம். அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்ய 'யுனெஸ்கோ' தேர்வுக் குழு பிரதிநிதியான வாஜாங் லீ தலைமையில் மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
அவர்களை செஞ்சி எம்எல்ஏ-வான அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், ஆட்சியர் பழனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி, செஞ்சி ஒன்றியக் குழுத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். செஞ்சிக் கோட்டையில் இக்குழுவினர் இன்று ஆய்வு செய்வதால் இக்குழுவைத் தவிர வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆய்வுக்குப் பிறகு, பிற்பகலில் மக்கள் பிரதிநிதிகள், ராஜா தேசிங்கு வம்சாவளியினர் உள்ளிட்ட 30 பேருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆய்வுக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து ஆய்வின் நோக்கம் குறித்து விவரிக்க இருக்கிறார்கள். இந்த குழுவினரின் பரிந்துரை அடிப்படையில், செஞ்சிக் கோட்டை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.