Published : 27 Jun 2018 09:10 PM
Last Updated : 27 Jun 2018 09:10 PM

பிரபல நடிகரின் நண்பரிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர்கள்: சிவாஜி வீட்டருகே நடந்த வழிப்பறி: வைரலான சிசிடிவி காட்சி

பிரபல நடிகரின் நண்பரை நள்ளிரவில் விரட்டி சென்று வழிப்பறி செய்த நபர்கள் கத்திமுனையில் பணம் பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டருகே நடந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.

சென்னையில் சாதாரணமாக நடந்த செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு ஒரு கட்டத்தில் வழிப்பறியாக மாறியுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று நபர்கள், அல்லது இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கைந்து நபர்கள் கும்பலாக வந்து கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை, செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட சில இடங்களில் வாகனத்தை பறித்துச்சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது. ஒரே நாளில் 16 இடங்கள், ஒரே நாளில் 45 சவரன் நகைகள், ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்கள் என செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, வழிப்பறி அதிகம் நடக்கிறது. தி.நகரில் மூன்று நாட்களுக்கு முன்னர் வடமாநில வாலிபர் ஒருவரை கையில் எதுவும் இல்லை என வெட்டிவிட்டு ஒரு கும்பல் தப்பிச்சென்றது.

இந்நிலையில் நடிகர் பிரபு வீட்டருகே நடந்த ஒரு வழிப்பறி கொள்ளை குறித்த சிசிடிவி காட்சிகள் இன்று வைரலாகி வருகிறது. நடிகர் பிரபுவின் நண்பர் என்று கூறப்படும் ஜார்ஜ் சிவாஜி கணேசன் வீடு அமைந்துள்ள தெற்கு போக் சாலைக்கு அருகே வசித்து வருகிறார். தலைமுடியை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவரும் இவர் கடந்த 12-ம் தேதி இரவு உணவு உண்டபின் காலார தெற்கு போக் சாலை அருகே வாக்கிங் சென்றுள்ளார்.

இரவு 12 மணி சாலையில் வாகன போக்குவரத்துக்கூட குறையாத நேரம், திடீரென அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் மறித்துள்ளனர். வழிப்பறி ஆட்கள் என தெரிந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அவர்கள் ஜார்ஜை மடக்கி பிடிக்கின்றனர்.

வேறு வழியில்லாமல் ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கிய இரண்டு பேர் அவரை கத்தியை காட்டி குத்தி விடுவது போல் மிரட்டுகின்றனர். இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் தயாராக நிற்கின்றனர். அப்போது அந்த சாலை வழியே கார் ஒன்று செல்கிறது.

கத்தியை காட்டி மிரட்டியவர்கள் அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு செல்கின்றனர். இந்த சிசிடிவி காட்சியை நடிகர் பிரபு தன் நண்பரிடம் கொடுத்து இவ்வாறெல்லாம் வழிப்பறி நடக்கிறது இதை தவிர்க்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிசிடிவி காட்சிப்பதிவுகள் வெளியானவுடன் போலீஸ் தரப்பில் மேற்கண்ட குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் தீர விசாரித்ததில் இதுவரை குற்றவாளியை பிடிக்கவில்லை என சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் சர்வ சாதாரணமாக கத்தியுடன் கூட்டாக திரியும் இளைஞர்கள் அச்சமின்றி திரிவதும், பொதுமக்கள் அவர்களிடம் உடமை, உயிரை பறிகொடுக்காமல் அச்சத்துடன் திரிவதற்கும் மேற்கண்ட சிசிடிவி காட்சி எடுத்துக்காட்டாக உள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து வரும் போதைப்பொருட்களில் 10 சதவீதம் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதும், சென்னையில் ஆண்டுக்கு ஆண்டு கஞ்சா விற்பனை கூடிக்கொண்டே போவதும், குற்றவாளிகள் அச்சமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றுவதும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்துவதும் சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x