

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல வனத் துறை முழுவதுமாக தடை விதித்துள்ளது. செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங் களை சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் பஸ்கள், கார்களில் இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டினரும் அதிகளவு வருகின்றனர். இவர்கள் வாகனங்களில் தாங்கள் எடுத்து வரும் உணவு, தண்ணீர், பிளாஸ்டிக் பை, பாட்டில்களைப் பயன்படுத் திய பிறகு சுற்றுலாத் தலங்களில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.
வனவிலங்குகள் பாதிப்பு
பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் பாலி புரோபின் என்ற விஷத்தன்மை உள்ள பொருளைக் கொண்டு தயாராகிறது. இந்த பிளாஸ்டிக் பொருளில் எளிதில் ஓட்டை விழாது. கிழியாது. சவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே செல்லும்.
சுற்றுலாப் பயணிகள், வீசும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை வன விலங்குகள் தெரியாமல் சாப்பிட்டு விடுவதால் தொண்டையில் சிக்கி செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நாளடைவில் வன விலங்குகள் உயிரிழக்கின்றன.
கொடைக்கானல், முதுமலை, நீலகிரி உட்பட தமிழகத்தின் வனப்பகுதி சுற்றுலா தலங்களில் சமீப காலத்தில் இறந்த மிளா, மான், காட்டு மாடு மற்றும் யானைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ததில் அந்த விலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கியதால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. அதனால், தமிழ்நாடு வனத்துறை, தற்போது வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருளை எடுத்துச் செல்ல முழுவதுமாகத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து, கொடைக்கான லில் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்வதைத் தடுக்க மலைச் சாலைகளில் செக்போஸ்ட் அமைத்து வனத்துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: ’’கொடைக்கானல் வன உயிரினங்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி 1972-ன்படி சரணாலயத் துக்குள் பிளாஸ்டிக் எடுத்துச் செல்வது தவறு. பிளாஸ்டிக் வன உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அதனால், செண் பகனூர், அமைதி பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், குணா குகை உட்பட வனப் பகுதி சுற்றுலாத் தலங்களில் பரிசோதனை செய்த பிறகே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறோம்” என்றார்.