

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களை நிரப்ப இன்று (வியாழக்கிழமை) சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்பு துணைத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பொறியியல் துணை கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடந்தது. இதில் ஏறத்தாழ 1500 மாணவர்கள் கலந்துகொண்டு அட்மிஷன் பெற்றனர்.
இந்நிலையில், அருந்ததியர் உள்ஒதுக்கீட்டில் (3 சதவீதம்) காலியாக உள்ள இடங்களை எஸ்சி மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) காலை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் எஸ்சி மாணவ-மாணவிகள் தங்கள் பெயரை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
4,900 காலியிடங்கள்
ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களும் விரும்பினால் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம். சிறப்பு கலந்தாய்வுக்கு வருவோர், ரூ.1000 முன்வைப்புத்தொகை, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்று (டிசி), சாதி சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டில், ஏறத்தாழ 4,900 காலியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.