பொது மன்னிப்பால் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி தங்கச்சிமடம் திரும்பிய மீனவர்!

மீனவர் சகாய ராபர்ட்
மீனவர் சகாய ராபர்ட்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையின் தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பால் இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் இன்று (செப்.26) தாயகம் திரும்பினார்.

கடந்த ஜூலை 23ம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆரோக்கிய இசாக் ராபின் என்பவரின் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சகாய ராபர்ட் (49), யாகோப், முத்துராமலிங்கம், ராதா, சேகர் ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. இது தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 29ம் தேதி அன்று இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம், சகாய ராபர்ட் என்ற மீனவர் இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்டதால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்தும், மற்ற 4 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கையில் செப்டம்பர் 12-ம் தேதி தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறிய குற்றங்கள் மற்றும், அபாராத தொகையைச் செலுத்த தவறியமைக்காக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 359 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த சகாய ராபர்ட் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மீனவர் சகாய ராபர்ட் கடந்த செவ்வாய்கிழமை இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து மீனவளத்துறை அதிகாரிகள் அவரை தங்கச்சிமடத்துக்கு இன்று (செப்.26) காலை அழைத்து வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in