“செந்தில் பாலாஜியை போல சட்டப் போராட்டம் நடத்தியவரை பார்க்க முடியாது” - சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பெருமிதம்

புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்
Updated on
1 min read

புதுக்கோட்டை: “உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை போல சட்டப் போராட்டம் நடத்தியவரை பார்க்க முடியாது,” என சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (செப்.26) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. அவர் கூறியது: “செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது மகிழ்ச்சியான ஒன்று. கடந்த 15 மாதங்களாக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வந்துள்ளார். அவரைப் போல பொறுமையோடு சட்டப் போராட்டம் நடத்தியவரை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பதவி கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு அவர் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

நிச்சயமாக அவர் வழக்குகளில் வெற்றி பெறுவதற்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளன. ஆனால், அவர்கள் எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளனர்? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்? என்று பார்த்தால் அது மிக மிக குறைவாகத்தான் இருக்கும். வழக்குகளைப் போடுவது என்பதை ஒரு பாலிசியாக அமலாக்கத் துறையினர் வைத்துள்ளனரே தவிர, இறுதித் தீர்ப்புக்கு அவர்கள் செல்வது இல்லை. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தமிழக முதல்வரின் முடிவைப் பொறுத்தது. அதைப் பற்றி கருத்து கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை,” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in