

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மனை பட்டா தராததைக் கண்டித்து அங்குள்ள மக்கள் பள்ளம் தோண்டி ஜீவசமாதி ஆகப்போவதாக நூதனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த ராதாகிருஷ்ணன் நகர் வீராம்பட்டினம் சாலையில் செட்டிகுளம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 18-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலையோரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்காக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக செட்டிகுளம் பகுதியில் சாலையோரத்தில் வசிக்கும் இந்த மக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த மக்கள், சாலையோரத்தில் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பின்புறம் உள்ள இடத்தில் தங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்திலும் தங்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகளை திரும்ப ஒப்படைத்தனர். அப்படி இருந்தும் இதுவரை அவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து அவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலை செட்டிகுளத்தில் தாங்கள் வசிக்கும் இடத்தில் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அதில் ஆண்கள், பெண்கள் என பத்து பேர் உள்ளே இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் தாங்கள் தோண்டிய பள்ளத்துக்குள்ளேயே ஜீவசமாதி ஆவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த அரியாங்குப்பம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் எந்த சமாதானத்தையும் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.