Published : 26 Sep 2024 06:20 AM
Last Updated : 26 Sep 2024 06:20 AM
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி,மத்திய அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்டபகுதிகளில் 3 புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் எதற்காக வசூலிக்கப்படுகின்றன, அடிப்படை காரணம் என்ன, இன்னும் எத்தனை நாளைக்கு கட்டண வசூல் நீடிக்கும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
பல சுங்கச் சாவடிகளில் வசூலிக்க வேண்டிய தொகையின் இலக்கு முடிந்தும், தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு, பெரியஅளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்க வேண்டும். மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையின்பேரில் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
தமிழக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களை, சுங்கச்சாவடிக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழகத்தில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்தப் பகுதி மாவட்ட காங்கிரஸ் சார்பில் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT