Last Updated : 30 Jun, 2018 06:18 PM

 

Published : 30 Jun 2018 06:18 PM
Last Updated : 30 Jun 2018 06:18 PM

மதுரை, விருதுநகர், டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: சென்னையில் எப்போது?- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

மதுரை, விருதுநகர், ஈரோடு, மேட்டுப்பாளையம், டெல்டா மாவட்டங்களில் இன்று இரவுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், இமயமலைப்பகுதிகள், பிஹார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில், தென் மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறைந்துள்ளதால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவரும் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். பிரதீப்ஜான் இன்று பதிவிட்டுஇருப்பதாவது:

‘‘தென்மேற்கு பருவமழை உச்சத்தை அடைந்து, இமயமலைப் பகுதிகள், பீகார், உத்தரப்பிரதேசம், இமாச்சல், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கோவா, மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்கள் மழை பெய்து வருகிறது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை குறையத் தொடங்கி இருப்பதால், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இன்று இரவுக்குள் பெய்யக்கூடும்.

குறிப்பாக, மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு  டெல்டா மாவட்டங்களான தஞ்சை, கும்பகோணம் பகுதி,புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,நாமக்கல், கரூர், நாகை, திருவாரூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். டெல்டா பகுதியைச் சுற்றி இன்று இரவுக்குள் மழை பெய்ய சாதகமான சூழல்கள் காணப்படுகின்றன.

சென்னைக்கு மழை எப்போது?

சென்னையில் மழை நாளை மாலை அல்லது நாளை மறுநாள் மாலை அல்லது இரவில் பெய்ய சாதகமான சூழல்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

தி இந்து (தமிழ்  சார்பில் பிரதீப்ஜானிடம் சென்னைக்கு எப்போது  மழை என்று கேட்டபோது அவர் கூறுகையில், சென்னையைப் பொருத்தவரை நாளை அல்லது நாளை மறுநாள் மழை பெய்யவே வாய்ப்பு இருக்கிறது. மழை மாலை நேரத்தில் பெய்தால் இடியுடன் கூடிய மழையாகவும், இரவு நேரத்தில் மழைபெய்யும் போது இடிமின்னல் இருக்காது. கடற்பகுதியில் இருந்து மாலைநேரத்தில் குளிர்ந்த காற்றுவீசத் தொடங்கும் போது, மழைக்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் இன்று இரவு மழை பெய்யக்கூடும். அதன்பின் சில நாட்களுக்கு மழை இருக்காது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x