Published : 05 Jun 2018 12:29 PM
Last Updated : 05 Jun 2018 12:29 PM

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை: தமிழக அரசு அறிவிப்பு

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 29-ம் தேதி முதல், துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது. மேலும், கழிவு நீர் செல்லும் பாதைகளிலும் இதன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைகிறது.

மேலும் மழைநீர், பூமியில் கசிந்து நிலத்தடியினை அடையாமல் போவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும் போது, கொசு உற்பத்தியாகி, அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன.

மேலும், மழைநீர்க் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ளப் பெருக்கு ஏற்படவும் காரணமாகிவிடுகிறது. மண் வளமும் பாதிக்கப்படுகிறது. தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது, அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது.

உணவுப் பொருட்களுடன் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலை ஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகிறது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம். இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது.

எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது. மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் / தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்யப்படுகிறது.

பொதுமக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், 2019, ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x