

சென்னை: கோவை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில், கோவை மேயர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மன்றக் கூட்டம் கடந்த செப்.13 அன்று மேயர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 47-வது வார்டு அதிமுக கவுன்சிலரான பிரபாகரனை அடுத்த மூன்று கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்து மேயர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோவை ரத்தினம்பட்டியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலரான பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'மக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் காரணமாக, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக கவுன்சிலராக பதவி வகித்து வருகிறேன். கடந்த செப்.13 அன்று நடந்த மாமன்றக் கூட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தி்ல் எந்தவொரு நலத்திட்டமும் நடைபெறவில்லை என திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் என்னென்ன பணிகளை செய்துள்ளோம் என்பதை விளக்கமளித்தோம்.
மேலும் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் நீங்கள் என்னென்ன செய்துள்ளீர்கள் என நான் கேள்வி எழுப்பினேன். அதையடுத்து என்னை அடுத்த கூட்டத் தொடர்களில் பங்கேற்க விடாமல் இடைநீக்கம் செய்து மேயர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம் என்பதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக கோவை மேயர், கோவை மாநகராட்சி ஆணையர் உள்ளி்ட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.