

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தொடர்பாக 2 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவையில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த விவேகானந்தன் (57) புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 16ம் தேதி, தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பு, காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதியான வில்லியனூரைச் சேர்ந்த பிரதீஷ் (26) கடந்த ஜூன் 11ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 2 சம்பவங்களிலும், பணியின்போது அலட்சியமாக இருந்த சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து விவேகானந்தன் தற்கொலை செய்தபோது பணியில் இருந்த சிறைக் காவலர் முத்துக்குமரன், காரைக்காலில் கைதி பிரதீஷ் தற்கொலை செய்து கொண்டபோது பணியில் இருந்த சிறைக் காவலர் ராமன் ஆகிய இருவரையும், சிறைத்துறை ஐஜி ரவிதீப் சிங் சாகர் இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.