அமைச்சரவை மாற்றம் தமிழகத்தில் எப்போது? - முதல்வர் ஸ்டாலின் பதில்

அமைச்சரவை மாற்றம் தமிழகத்தில் எப்போது? - முதல்வர் ஸ்டாலின் பதில்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்த கேள்விக்கு ‘‘ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் வரும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டது முதலே, அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுவது உறுதி என்ற பேச்சு எழுந்தது. பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் இதுகுறித்து பேசி வருகின்றனர். சென்னையில் கடந்த 17-ம் தேதி நடந்த திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ‘‘முதல்வருக்கும், மற்ற தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டாமா. காலம் தாழ்த்தாதீர்கள்’’ என்றார்.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட அவரிடம் செய்தியாளர்கள், ‘‘அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்த பேச்சுகள் நீண்ட நாட்களாகவே உள்ளது. விரைவில் சொன்னதை செய்வோம் என்று நீங்களும் கூறியுள்ளீர்கள். அமைச்சரவையில் மாற்றம் வருமா? எப்போது?’’ என்று கேட்டனர். அதற்கு முதல்வர், ‘‘ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் வரும்’’ என்றார்.

‘‘உங்கள் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் வெள்ளை அறிக்கை கேட்கின்றனரே’’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அவர்களது வெள்ளை அறிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அமைச்சர் டிஆர்பி ராஜா தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கைதான்’’ என்று முதல்வர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in