Published : 25 Sep 2024 05:27 AM
Last Updated : 25 Sep 2024 05:27 AM
சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.4.76 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளி கட்டிடம், உடற்பயிற்சிக் கூடத்தை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.45.47 கோடியில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூட கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகத்துக்கான இடத்தை பார்வையிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜி.கே.எம். காலனி 12-வது தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ் ரூ.2.43 கோடியில் தரைதளம் மற்றும் முதல் தளம், நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட 2-ம் தளம் என ரூ.4.23 கோடியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், துரைசாமி மடத்தில்ரூ.26.43 லட்சம் செலவில் நவீனவசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப் பட்ட உடற்பயிற்சிக்கூடம், நேர்மை நகர் மயான பூமியில் ரூ.26.29 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில், பள்ளி, மாணவ மாணவியருடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
புதிய கட்டிடப் பணிகள்: கொளத்தூர் முத்துக்குமரப்பா தெருவில் ரூ.13.47 கோடியில் 40,300 சதுரஅடியில் 3 தளங்கள்கொண்ட சமுதாய நலக்கூடம் கட்டப்படுகிறது. இக்கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில் கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிடம் மற்றும் வணிக வளாகங்கள் என ரூ.32 கோடியில் 4 தளங்களுடன் கூடிய மக்கள் சேவை மையம் கட்டப்பட உள்ள இடத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதன்பின், கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் கொளத்தூர் பகுதிக்கான அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்த முதல்வர், தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மூத்த முன்னோடி ஏகப்பன் உள்ளிட்ட 443 நிர்வாகி களுக்கு சிறப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் பி.வில்சன், கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், எம்எல்ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார், வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT