Published : 25 Sep 2024 06:11 AM
Last Updated : 25 Sep 2024 06:11 AM
சென்னை: அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் 80-வது வாரியக் கூட்டம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், தொழிலாளர் நலவாரியக் கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: சட்டபேரவை அறிவிப்பின்படி, சென்னை, மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதிய ஓய்வு இல்லங்கள், புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. வாரிய நலத்திட்டப் பயன்கள் அதிக தொழிலாளர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக தற்போதுள்ள ஊதிய உச்ச வரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் 30,134 தொழிலாளர்களுக்கு ரூ.12.54 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திருமண உதவித் தொகையாக 3,264 பயனாளிகளுக்கு ரூ.4.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஈமச்சடங்கு உதவித் தொகை: மேலும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 902 வாரிசுதாரர்களுக்கு ரூ.2.88 கோடியும், விபத்து மரணம்மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 241 வாரிசுதாரர்களுக்கு ரூ.2.85 கோடியும் வழங்கப்பட்டுஉள்ளது.
மேலும், திருமண உதவித் தொகை, கடந்தாண்டு ஏப்.1-ம் தேதி முதல் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, இது ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வேடசந்தூர் எம்எல்ஏ எஸ்.காந்திராஜன், தொழிலாளர் ஆணையர்அதுல் ஆனந்த், தொழிலாளர்துறை செயலர் கொ.வீரராகவராவ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன், நிதித்துறை துணைச் செயலர் தயாளன், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியச் செயலர் உ.உமாதேவி பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT