

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் வாக்குமூலத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் என அரசு தரப்புக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமியை, தண்ணீர் கேன் விநியோகம் செய்யும்இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது, அவர்களை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மிரட்டி,தாக்கியதாக வீடியோ வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடு்த்து விசாரித்துவருகிறது. அதேபோல சிறுமியின் தாயாரும் தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில்பதில் மனுவை தாக்கல் செய்தமாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘‘போலீஸார் அடித்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றச்சாட்டுக்குள்ளான காவல் ஆய்வாளர் ராஜி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும், வெளிப்படையாக கூற இயலாத சில விஷயங்களை விவரிக்கவும் இந்த வழக்கை ரகசிய விசாரணையாக சேம்பரில் வைத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவல் ஆய்வாளர் பெற்ற வாக்குமூலம் தொடர்பான ஆடியோசமூக வலைதளங்களில் பரவியதுஎப்படி? அதை வெளியிட்டது யார்?’’என்று கேள்வி எழுப்பினர். அதற்குமனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜிதான்அந்த ஆடியோவை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம்உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தலைமைகுற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் காவல்துறையின் பதில்மனுவுக்கு மனுதாரர் தரப்பில்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.