Published : 24 Sep 2024 05:45 AM
Last Updated : 24 Sep 2024 05:45 AM
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி மற்றும் பணி சார்ந்த 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக டிட்டோ ஜாக் அறிவித்தது.
இதையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன், டிட்டோ ஜாக் நிர்வாகிகள் 12 பேர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பள்ளிக்கல்வி செயலர் சோ.மதுமதி, இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்விஇயக்குநர் நரேஷ் உள்ளிட்டோர்பங்கேற்றனர். ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிட்டோ ஜாக் சுழல் முறைத் தலைவர் கோ.காமராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
டிட்டோ ஜாக் நிர்வாகிகளை அமைச்சர் அழைத்து பேசினார். பணி சார்ந்த கோரிக்கையில்,ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறும் அரசாணைஎண் 243 -ல் உள்ள பாதகங்களைஎடுத்து கூறினோம். விரைவில் அதுகுறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் அப்போது தெரிவித்தார். நிதிசார்ந்த கோரிக்கையில் ரூ.5,400 தர ஊதியம் குறித்தும், பிலிட். முடித்த ஆசிரியர்கள் பிரச்சினை, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்ற 25 ஆண்டு கோரிக்கை ஆகியவை குறித்தும் முதல்வர் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தோம்.
வரும் செப்.27-ம் தேதி பிரதமரை சந்திக்க முதல்வர் டெல்லி செல்கிறார். அப்போது கல்வி தொடர்பாக நிலுவையில் உள்ள நிதியை பெற வலியுறுத்துவார் என அமைச்சர் கூறினார். மேலும் தமிழக நிதிநிலை குறித்தும்அமைச்சர் விவரித்தார்.
ஆசிரியர்கள் முதல்வரை நம்பியுள்ளனர். மத்திய அரசின்நிதியை பெற்று எங்களின் நிதிசார்ந்தகோரிக்கை களை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர். எனவே, எங்கள் கூட்டமைப்பின் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பேசி, ஏற்கெனவே அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பது என்று முடிவெடுத்துள்ளோம். அமைச்சர் எங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளதால், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243 நிச்சயம் ரத்து செயயப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட குழு, ஒரு மாதத்துக்குள் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து பேசி, தீர்வு காணும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அணுகுமுறை நம்பிக்கைக்குரியதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT