

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகளாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ஆர்.பூர்ணிமா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை பதிவாளராக பணியாற்றிய எம்.ஜோதிராமன், சென்னை தொழிலக தீர்ப்பாயத்தில் சிறப்பு நீதிபதியாக பணியாற்றிய ஏ.டி.மரியா க்ளேட் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவி்ட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து 3 புதியநீதிபதிகளும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். 3 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதிடி.கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகளை வரவேற்றும், பாராட்டியும் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசினார்.
பின்னர் புதிய நீதிபதிகளை வரவேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார்அசோசியேஷன் தலைவர் பாஸ்கர்,சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் உட்பட பலர் பேசினர். இதற்கு புதிதாக பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.