Published : 24 Sep 2024 06:04 AM
Last Updated : 24 Sep 2024 06:04 AM

ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளே ரயில்வே குற்றங்களுக்கு காரணம் என ஆர்பிஎஃப் ஆய்வில் தகவல்

சென்னை: பயணிகளுக்கு இடையூறு, ரயில்மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், பயணிகளிடம் திருட்டு போன்ற குற்றங்களுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களே முக்கிய காரணம் என ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 39 டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் பொதுப் போக்குவரத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகுக்கிறது. சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினசரி 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

இந்த ரயில்களில் பயணிகளிடம் திருட்டு, ரயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், ரயிலில் சிக்கி உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இவற்றில் சில பிரச்சினைகளுக்கு வழக்குப் பதிந்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி தீர்வு கண்டு வருகின்றனர். இருப்பினும், ரயில்வே சொத்து சேதம் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வு இல்லாத நிலை இருக்கிறது.

இதற்கிடையில், இந்த பிரச்சினைகளுக்கான காரணம் தொடர்பாக, ஆர்.பி.எஃப் போலீஸார் ஆய்வுமேற்கொண்டனர். இந்த ஆய்வில், இந்த குற்றங்களுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகள், பார்கள்தான் காரணம்என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு தெற்கு ரயில்வே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியது. இதில், 39 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளது.

10 கல்வீச்சு சம்பவம்: இதுகுறித்து சென்னை ரயில்வேகோட்ட ஆர்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 39 டாஸ்மாக் கடைகளை ஆர்பிஎஃப் அடையாளம் கண்டுள்ளது.

இந்த கடைகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இடையூறுகள் குறித்த புகார்கள் வந்த இடங்களின் ஆய்வு நடத்தப்பட்டது. சில சமயங்களில், ரயில்தண்டவாளத்தில் இறந்து கிடக்கும்நபர், அருகில் உள்ள பார்களில்இருந்து மது அருந்திவிட்டு, தண்டவாளத்தைக் கடைக்கும் போதுரயிலில் சிக்கியது தெரியவந்தது.

இதுதவிர, லெவல் கிராசிங் கேட்டுகளுக்கு அருகில் செயல்படும் சில மதுக்கடைகளை ரயில்வே நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இளைஞர்கள் மது அருந்திய பிறகு, அருகிலுள்ள ரயில் பாதைகளுக்கு குறுக்கே நடந்து சென்றுசிக்னல்களை சேதப்படுத்துகிறார்கள்.

இது ரயில் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதத்துக்கு 10 கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்கிறோம். இது, ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் தொடர்புடையது என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு கூட்டுக் குழுவை அமைப்பதைத் தவிர, சர்ச்சைக்குரிய இந்தக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான வழிமுறையை விரும்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x