Published : 15 Aug 2014 10:56 AM
Last Updated : 15 Aug 2014 10:56 AM

பள்ளிகளில் மாணவர்களுக்கு கலவை சாதத்துடன் மசாலா முட்டை; தியாகி ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: முதல்வர் சுதந்திர தின அறிவிப்பு

தமிழகம் தொடக்கக் கல்வி, மேல்நிலைக் கல்வியில் தன்னிறைவு பெற்றுள்ளது என சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் பொங்க கூறினார்.

68-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர்: மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததோடு, கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து, கல்வியில் ஒரு புரட்சியையே தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை தன்னிறைவு பெற்றுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவில் முதல்வர் பேசியதாவது:

"இன்று நம் இந்தியத் திருநாட்டின் 68-வது விடுதலைத் திருநாள்! பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, விடுதலைப் பெற்று தற்போது உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நன்னாளில் பட்டொளி வீசிப் பறக்கும் தாயின் மணிக்கொடியை பதினான்காவது முறையாக ஏற்றி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்; பெருமிதம் கொள்கின்றேன். இந்த அரும் பெரும் வாய்ப்பினை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை இந்தத் தருணத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தங்கள் மூச்சுக் காற்றை தியாகம் செய்தவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டிய நாள் இந்தச்சுதந்திரத் திருநாள்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களுடைய தியாகம் காலவெள்ளத்தால் அழியாத கல்வெட்டு. கோபுரத்தின் உச்சிபோல, விடுதலை வேள்வியில் புகழின் உச்சிக்கு சென்றவர்கள் தமிழர்கள். சுதந்திரப் போராட்டத்தில், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், அத்தனை வீர நெஞ்சங்களுக்கும் என்னுடைய உள்ளப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான வீர வணக்கங்களை உங்களோடு சேர்ந்து செலுத்துவதில் பெருமிதம் அடைகின்றேன்.

"சுதந்திரத்தைப் பெற்று விடுவது கூட எளிது. அதைப் பாதுகாப்பது அதைவிடக் கடினம். பாதுகாப்பது கூட எளிது. சுதந்திரத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும் சேரச் செய்வது கடினம்" என்றார் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்த அதிமுக அரசு, சுதந்திரத்தின் பயனை அனைவரும் பெறும் வகையிலான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அண்ணாவின் பொன்மொழி மெய் மொழி ஆக்கப்பட்டு இருக்கிறது.

இன்றைக்கு தமிழக அரசு சுதந்திரத்தின் பயனை மக்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பெறுவதை உறுதி செய்துள்ளது.

சுதந்திரம் என்பதன் உட்பொருளை, முழுமையான தத்துவத்தை அரசு வழங்கி வருகிறது. எனவே தான், இங்கு யாரும், யாருக்கும் இளைப்பில்லை என்ற புதிய விதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

"ஏழை சொல் அம்பலம் ஏறாது" என்பது பழமொழி. ஏழை சொல் தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்" என்ற புதுமொழியை தமிழகத்திலே நிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே தான், விளை நிலங்களின் வழியே ‘ழுஹஐடு’ குழாய் பதிப்பு திட்டம் என்றாலும், தஞ்சை தரணியில் ‘மீத்தேன் எரிவாயு’ திட்டம் என்றாலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை திட்டம் என்றாலும், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்றாலும், அவற்றை எல்லாம் திடமாக, உறுதியாக எதிர்க்கும் அரசாக, அவற்றை தமிழ்நாட்டில் காலூன்ற விடாத அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.

ஏழை, எளிய மக்களை பாதுகாக்கும் அரசாக, அவர்களை கை தூக்கிவிடும் அரசாக எனது தலைமையிலான அரசு விளங்கி வருகிறது. எனவே தான் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பயன் தரக் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்குதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 35 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு 1,000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குதல், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், ஏழை, எளியோர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக 4 கிராம் தாலிக்கு தங்கத்துடன் 50,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மூலம் ஏழை, எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேனல்களைக் கண்டு களிக்கும் திட்டம், மிக மிகக் குறைந்த விலையில் உணவளிக்கும் அம்மா உணவகங்கள், குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்றால், இது போன்ற வறுமை ஒழிப்பு திட்டங்கள் மட்டும் போதாது. அவர்கள் கல்வி கற்றவர்களாக திகழும் போது தான் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற முடியும் என்பதால் தான்; கல்விக்கு மிக உயரிய முக்கியத்துவத்தை அளித்து, கல்வியில் ஒரு புரட்சியையே அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை தன்னிறைவு பெற்றுள்ளது. இரு விரல் கொண்டு எழுதியவர்கள் இன்று பத்து விரல் கொண்டு கணினியில் எழுதுகிறார்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் இந்த நிதியாண்டில் 19 ஆயிரத்து 634 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதிலிருந்தே; கல்வியில் எந்த அளவுக்கு அரசு கவனம் செலுத்துகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

"யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே" என்று சுதந்திர இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று நனவாகியுள்ளது.

இதே போன்று, சிறந்த உடல் நலத்தை பெற்றவர்களாக தமிழக மக்கள் அனைவரும் திகழ வேண்டும் என்ற அடிப்படையில், பல்வேறு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. அதிக செலவு ஏற்படக் கூடிய நோய்களுக்கான சிகிச்சைகளை ஏழை, எளிய மக்கள் எவ்வித செலவும் இன்றி பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை துவக்கப்பட்டு, அங்கு ஏழை, எளிய மக்கள் உயர் தர சிகிச்சையினை பெற்று வருகிறார்கள். நகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கிராமப்புறங்களில் உள்ள 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 42 ஆரம்ப சுகாதார மையங்கள், தாய்-சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. சுமார் 135 கோடி ரூபாய் செலவில் புதிதாக 172 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுவன்றி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் மகப்பேறு சேவை வழங்கப்படுகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் 12,000 ரூபாய் மகப்பேறு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம், கர்ப்ப கால சேவைகளைப் பெறுவதற்கு ஊக்கம் அளிக்கப்படுவதுடன், மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளப்படுவதும், சிசுக்களுக்கு தடுப்பு ஊசி வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக சுகாதாரக் குறியீடுகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

வேளாண் துறையில் வியத்தகு வளர்ச்சியை தமிழகம் கண்டிருக்கிறது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகபட்ச உணவு தானிய உற்பத்தி 82.63 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், 2011-2012 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 101.52 லட்சம் டன் என்ற உயர் அளவை எட்டி சாதனை படைத்தது. 2013-2014-ஆம் ஆண்டின் உணவு தானிய உற்பத்தி 110.65 லட்சம் மெட்ரிக் டன் என்ற புதிய சாதனை அளவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சியின் அதிகபட்ச உற்பத்தியை ஒப்பிடும் போது, இது 34 விழுக்காடு அதிகம்.

ஒருவனுக்கு மீன் பிடித்து தருவதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடு அவன் பிழைத்துக் கொள்வான் என்ற சிந்தனைக்கேற்ப, வேலைவாய்ப்புகளையும், சுய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திடும் வகையில், தொழில் துறையில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

மொத்தத்தில், தமிழ்நாட்டிற்காக, தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், சுதந்திரத்தின் பயன் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு அதனை உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்றது தமிழக அரசு.

சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 9,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். இதன் மூலம், 1,955 நபர்கள் பயனடைவர்.

இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு 1 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

இதுவன்றி, விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக குறிப்பிடத் தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ. சிதம்பரனாரின் பேரன் ஆகியோருக்கு மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ஓய்வூதியம் இனி 4,500 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் 195 நபர்கள் பயனடைவர். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச் சத்தை உறுதி செய்யும் வகையில், 1982ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. சத்துணவுத் திட்டத்தில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதை மாற்றி, சுவையான உணவினை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில்; ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் சோதனை அடிப்படையில், பலவகை கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடித் திட்டம் சென்ற ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும், பலவகை கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை உணவு வகைகள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும். இதன் மூலம், ஆண்டு ஒன்றிற்கு அரசுக்கு 103 கோடியே 28 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாய்மொழிக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற அரசு, தமிழகத்து மக்கள் எல்லாமும் பெற்றிடும் வகையில், அயராது உழைத்துக் கொண்டே இருக்குமம்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x