அனைத்து மருத்துவமனைகளிலும் டயாசிலிஸ் தொழில்நுட்பனர் நியமிக்க கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளிலும் டயாசிலிஸ் தொழில்நுட்பனர் நியமிக்க கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையில் நிரந்தர டயாசிலிஸ் தொழில்நுட்பனர்கள் நியமிக்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் டயாலிசிஸ் தொழில் நுட்பனர்களை நியமிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டயாலிசிஸ் தொழில் நுட்பனர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு 2017-ல் உத்தரவிடப்பட்டது.

பின்னர் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் டயாலிசிஸ் தொழில்நுட்பனர் நியமனத் தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த நியமனம் தற்காலிக அடிப்படையில் நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் 2,050 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. 3 பேருக்கு ஒரு டயாசிஸ் தொழில்நுட்பனர் என்ற விகிதத்தில் பணி நியமனம் நடைபெற வேண்டும். அந்த எண்ணிக்கையில் நியமனம் நடைபெறவில்லை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டயாசிலிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 2017ல் 5,861-ஆக இருந்தது, 2023ல் 35,764-ஆக உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையில் நிரந்தர டயாலிசிஸ் தொழில் நுட்பனர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சுந்தர்மோகன் அமர்வு, “உயர் நீதிமன்றம் 2017ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது?” என கேள்வி எழுப்பியது. பின்னர், மனு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், மருத்துவப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்.30-க்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in