Last Updated : 27 Jun, 2018 08:18 AM

 

Published : 27 Jun 2018 08:18 AM
Last Updated : 27 Jun 2018 08:18 AM

தமிழக காவல்துறை சார்பில் வரும் 29-ல் ‘மாபெரும் ரத்ததான முகாம்’-போலீஸாரிடமிருந்து தானமாக பெறப்படும் ரத்தம் வீணாகும் அபாயம்

தமிழக காவல்துறை சார்பில் வரும் 29-ம் தேதி நடத்தும் மாபெரும் ரத்ததான முகாமில் பெறப்படும் ரத்தத்தை சேமித்து வைக்க போதிய இடவசதியில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்த முடியாத நிலை போன்றவற்றால் போலீஸ்காரர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தம் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை சார்பில் வரும் 29-ம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த முகாம்களை சென்னையில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் கட்டாயம் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரில் 50 சதவீதம் (60 ஆயிரம்) பேர் ரத்ததானம் செய்தால்கூட 60 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்படும். ஆனால், ஒரே நேரத்தில் சேகரிக்கப்படும் 60 ஆயிரம் யூனிட் ரத்தத்தை சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும் முடியாத நிலை உள்ளது. இதனால், தானமாக பெறப்படும் ரத்தம் வீணாவதற்கு அதிகம் வாய்ப்புள்ள தாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பின்னர் போலீஸார் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலீஸார் மீது பொதுமக்களுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுவதற்காக இந்த மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

7.5 லட்சம் யூனிட் ரத்தம்

இதுதொடர்பாக அரசு ரத்த வங்கிகளில் பணியாற்றும் டாக்டர்கள் கூறியதாவது:

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 1 சதவீதம் பேர் ரத்ததானம் செய்தாலே போதுமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த இலக்கை தமிழகம் அடைந்துவிட்டது. தமிழக மக்கள் தொகையான 7 கோடியே 50 லட்சம் பேரில் 1 சதவீதம் (7.5 லட்சம்) பேர் ஆண்டுக்கு ரத்ததானம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 88 அரசு ரத்த வங்கிகள் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் ரத்தமும், 300-க்கும் மேற்பட்ட தனியார் ரத்த வங்கிகள் மூலமாக 5 லட்சம் யூனிட் ரத்தமும் பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதிலும் சுமார் 5 சதவீத ரத்தம் வீணாகக்கூடும். உயிருக்கு ஆபத்தானவருக்கு ரத்தம் இல்லையென்று சொல்வதைவிட, 5 சதவீத ரத்தம் வீணாவது ஒன்றும் தவறில்லை. மாதம்தோறும் அரசு மற்றும் தனியார் சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு ரத்தம் தானமாக பெறப்பட்டு சேமித்து வைத்து சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

35 நாள் கால அவகாசம்

பொதுவாக தானமாக பெறப்படும் ரத்தத்தை சேமித்து வைத்து 35 நாட்களுக்குள் பயன்படுத்திட வேண்டும். இவை தவிர ரத்தத்தை சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா என பிரித்து வைக்கப்படும். சிவப்பணுக்களை 42 நாட்களுக்குள்ளும், தட்டணுக்களை 5 நாட்களுக்குள்ளும் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்மாவை மட்டும் ஓர் ஆண்டு வரை வைத்து பயன்படுத்தலாம். அதுவும் ரத்தத்தை பிரிக்கும் வசதி சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட சில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தானமாக பெறப்படும் ரத்தம் அப்படியேதான் 35 நாட்களுக்குள் தேவையானவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வீணாகும் அபாயம்

இந்நிலையில் காவல்துறை நடத்தவுள்ள மாபெரும் ரத்ததான முகாம்களில் ஒரே நேரத்தில் 60 ஆயிரம் யூனிட் பெறப்பட்டால், அந்த ரத்தத்தை சேமித்து வைக்க போதிய இடவசதியில்லை. அந்த ரத்தம் முழுவதும் குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்தவும் முடியாது. இதனால், ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தம் வீணாகும் அபாயம் உள்ளது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் தேவையான ரத்தம் தாராளமாக கிடைக்கிறது. அப்படி தேவை ஏற்பட்டால், சிறிய அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு ரத்தம் பெறப்படுகிறது. அப்படி இருக்கும் போது இதுபோன்ற மாபெரும் ரத்ததான முகாம் நடத்த வேண்டிய அவசியமில்லை.

மாபெரும் ரத்ததான முகாம்கள் நடத்தும் போது கூட்டம் அதிக அளவில் இருப்பதால் விதிமுறைகளை கடைப்பிடித்து ரத்தத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும். மாபெரும் ரத்ததான முகாம்கள் நடத்த வேண்டாம் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (என்ஏசிஓ) தெரிவித்துள்ளது.

இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

2014-ம் ஆண்டு வீணானது

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இதேபோன்று மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் பெறப்பட்டது. இதில் அரசு ரத்த வங்கிகள் மட்டுமின்றி தனியார் ரத்த வங்கிகளும் பங்கேற்றன. அப்படி இருந்தும் தானமாக பெறப்பட்ட ரத்தம் வீணானது. தற்போது நடைபெற உள்ள மாபெரும் ரத்ததான முகாமில் அரசு ரத்த வங்கிகள் மட்டும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

எப்படி இருந்தாலும் ஒரே நேரத்தில் 60 ஆயிரம் யூனிட் ரத்தம் பெறப்பட்டால் வீணாவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. போர் அல்லது பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அதிகமானோர் காயமடைவார்கள். அந்த நேரத்தில் மட்டுமே மாபெரும் ரத்ததான முகாம்கள் நடத்துவது சிறந்ததாக இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x