Published : 23 Sep 2024 06:20 AM
Last Updated : 23 Sep 2024 06:20 AM

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் ஆணையம்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பதில் கடிதம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பெற, இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து,மாற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகஉள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரகஉள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம், இந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இவை தவிர, கடந்த 2021-ம்ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, தேர்தல் நடத்தப்படாத நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகள் மற்றும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தலை நடத்தியது. திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட தேர்தலில் தேர்வான உறுப்பினர்கள் பதவிக்காலம் வரும் 2026-ம் ஆண்டு முடிவடைகிறது. வரும் 2026-ம் ஆண்டு தமிழகசட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலும் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்கஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி மாநில தேர்தல்ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கியுள்ளது. இதையொட்டி, வாக்குப் பெட்டிகளை சரிபார்க்கும் பணிகளுக்காக, சமீபத்தில் நிதி ஒதுக்கி, அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியது. முன்னதாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் கோரியது.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதம்மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, மார்ச் 27-ம் தேதி சட்டப்பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கேட்டது. அந்த வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று, மாநில தேர்தல் அதிகாரிக்கு மாநிலதேர்தல் ஆணைய செயலர் கே.பாலசுப்பிரமணியன் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதுதவிர, வாக்காளர் பட்டியல் தரவுகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், உரிய கள ஆய்வு மூலம்சரிபார்த்து, தனது சொந்த தரவுகளை ஆணையம் உருவாக்கும் எனவும் இந்த தரவுகளை யாருக்கும் பகிரமாட்டோம் தகுந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்துக்கே, மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான அனுமதி இருப்பதால், இக்கடிதத்தை, தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாஹு, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார்.

தேர்தல் ஆணையம், சில கேள்விகளை எழுப்பி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்வி கடிதத்துக்கு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில், அதனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மீண்டும்தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிஉள்ளார். இதையடுத்து, விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x