Published : 23 Sep 2024 05:56 AM
Last Updated : 23 Sep 2024 05:56 AM
கூடலூர்: முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க முடியாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம், பின்னர் பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு படிப்படியாக 152 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பெரியாறு அணையில் மராமத்துப் பணிகளுக்கு கேரள மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் பேபிஅணையைப் பலப்படுத்த முடியவில்லை.
இடுக்கி எம்.பி. டீன் குரியாகோஸ் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், அக். 1 முதல்பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும், முல்லை பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்தக் கோரியும், பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்யப் பரிந்துரைத்த மத்திய நீர்வள ஆணையத்தைக் கண்டித்தும், பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கம் சார்பில்,தமிழக எல்லையான குமுளியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக நேற்று லோயர்கேம்ப் பகுதிக்கு விவசாயிகள் வந்தனர். அங்கிருந்து அணையை நோக்கிஊர்வலமாகச் செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே உத்தமபாளையம் டிஎஸ்பிசெங்கோட்டு வேலவன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மணிமண்டபம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கேரள அரசு, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் பேசும்போது, “முல்லை பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும், மத்திய நீர்வள ஆணையம் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதையும் நாங்கள் ஏற்க மாட்டோம். பேபி அணையைப் பலப்படுத்திய பிறகுதான் அணையை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த அணையை நம்பி 5 மாவட்டங்களில், 10 லட்சம் விவசாயிகள்இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்து 10 ஆண்டுகளாகியும், அணையைப் பலப்படுத்த முடியவில்லை. இந்த நெருக்கடியில், பழைய அணையை இடித்து விட்டுபுதிய அணை கட்டுவது என்பதுஇந்திய ஒருமைப் பாட்டின் மீதுகைவைப்பதற்குச் சமம். பெரியாறுஅணையை உடைக்க நினைத்தால்,தற்கொலைப் படையாக மாறி தடுத்து நிறுத்துவோம். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தும் எங்களை மாற்றி விடாதீர்கள்” என்றார். ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT