

சென்னை: இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினாவில் அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச காட்சி நடைபெற உள்ளது. பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
இதுகுறித்து விமானப் படை அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய விமானப் படை கடந்த 1932 அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னையில் அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில், விமானப் படையின் பல்வேறு வகைகளை சேர்ந்த 72 விமானங்கள் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடும்.
குறிப்பாக, வானில் குட்டிக்கரணங்கள் அடிக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை இதில் பங்கேற்கின்றன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்து வகை விமானங்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபடுகின்றன. இந்திய விமானப் படையின் வலிமை, திறன்கள் மற்றும் நாட்டின் வான்பரப்பை பாதுகாப்பதில் அதன் ஈடுபாட்டையும் இது பிரதிபலிக்கும்.
ஆண்டுதோறும் டெல்லியில் மட்டுமே இந்த சாகச நிகழ்ச்சி நடந்து வந்தது. பின்னர், சண்டிகரில் கடந்த 2022-ம் ஆண்டும், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டும் நடைபெற்றது. தற்போது சென்னையில் நடக்க உள்ளது. இதை பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும். மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை இலவசமாக கண்டுகளிக்கலாம். முன்பதிவு செய்ய அவசியம் இல்லை.
தாம்பரம் விமானப் படை தளத்தில் அக்டோபர் 8-ம் தேதி நடக்க உள்ள அணிவகுப்பு நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.