Published : 31 Aug 2014 12:07 PM
Last Updated : 31 Aug 2014 12:07 PM

முறையான அமைப்பு இல்லாததே காங்கிரஸ் கட்சியின் பலவீனம்: நெய்வேலியில் ப.சிதம்பரம் பேச்சு

முறையான அமைப்பு இல்லாததே காங்கிரஸ் கட்சியின் பலவீனம் என நெய்வேலியில் நடந்த கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நெய்வேலி இந்திரா நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமைவகித்தார். கூட்டத்தில் முன்னாள் எம்பி-க்கள் கே.எஸ்.அழகிரி மற்றும் வள்ளல்பெருமான் ஆகியோர் மாநில காங்கிரஸ் தலைமையை ப.சிதம்பரம் ஏற்று கட்சியை வலுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

இதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது: ஒரு கட்சியில் தலைமை மாறுவதாலோ அல்லது தலைவரை மாற்றுவதாலோ பெரிய மாற்றம் நிகழ்ந்து விடாது. எனவே கே.எஸ்.அழகிரியும், வள்ளல் பெருமானும் கூறிய கருத்துக்களில் இருந்து நான் மாறுபடுகிறேன். நம் கட்சியின் பலவீனம் முறையான அமைப்பு இல்லை என்பது தான். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மாநில காங்கிரஸ் கமிட்டி உள்ளது. சில இடங்களில் செயல்படுகிறது. சில இடங்களில் செயலற்று இருக்கிறது.

மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு கீழ் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளது. இந்தியா முழுவதிலும் 650 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த 650 மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம்.

தமிழகத்தில் கூட 5 மாவட்டங்களில் காங்கிரஸ் கமிட்டி கிடையாது. இதேபோன்று இந்தியா முழுவதும் பல மாவட்டங்களில் காங்கிரஸ் கமிட்டி நியமிக்கப்படாமல் உள்ளது.

மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிக்குக் கீழ் நாடு முழுவதும் 6 ஆயிரத்து 500 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் பாதிக்கும் குறைந்த எண்ணிக்கையில் தான் காங்கிரஸ் கமிட்டி உள்ளது. ஒன்றிய காங்கிரஸ் கமிட்டிக்கு கீழ் கிராம காங்கிரஸ் என்று ஒன்று இருந்தது. தற்போது கிராம காங்கிரஸ் என்ற அமைப்பே இல்லாமல் போய்விட்டது. இது தான் காங்கிரஸ் கட்சியின் பலவீனம். கிராமங்களில் பொதுமக்கள் நம் கட்சியினரை எப்படி அணுகமுடியும். அங்கு நமது அமைப்பு இருந்தால் தானே அவர்கள் நம்கட்சியை அணுகுவார்கள். எனவே பலவீனம் நம்மிடம் தான் உள்ளது. அதற்குத் தலைமையை குறைகூறி பயனில்லை.

பூத் கமிட்டியை எப்படிக் கட்சியின் அடிப்படை கமிட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும். பூத் கமிட்டி ஒரு நீர்க்குமிழி போன்றது. தேர்தலுக்கு தேர்தல் பூத் கமிட்டி வரும். தேர்தல் முடிந்ததும் காணாமல் போய்விடும்.

60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நம் கட்சியில் தான் இருக்கிறார்கள். 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் நம்கட்சியில் இருந்தாலும், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 40 வயதுக்கும் கீழ் உள்ளவர்களை தேடவேண்டியதுள்ளது. 25 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் எவருமே இல்லை.

நம்கட்சியால் இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் இளைஞர் காங்கிரஸுக்கு உறுப்பினர்கள் சேர்த்தபோது 13 லட்சம் இளைஞர்கள் உறுப்பினரானார்கள். 2 ஆண்டுகள் கழித்து உறுப்பினர்கள் நீட்டிக்கப்பட்டபோது, 2 லட்சம் இளைஞர்களே உறுப்பினர்களாக தொடர்வது தெரியவந்தது. இளைஞர்களை நம்மால் ஈர்க்கவும் முடியவில்லை. ஈர்க்கப்பட்ட இளைஞர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

தற்போது கட்சியைப் பலப்படுத்தும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் சில முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கிராம காங்கிரஸ் கமிட்டியை உருவாக்குங்கள்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பலமே கிளைக் கழக அமைப்பு தான். அவர்கள் வெற்றிபெற்றாலும், தோற்றாலும் 2 லட்சம் வாக்குகளை தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே கட்சியின் அடிமட்டத்தை பலப்படுத்தும் பணியை தொடங்குங்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x